ஜித்ரா, மார்ச்.17-
வாகனம் ஒன்றில், திடீரென்று தீப்பிடித்துக் கொண்டதில், கணவனும், மனைவியும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். இச்சம்பவம் இன்று காலை 10.50 மணியளவில் வடக்கு தெற்கு நெடுஞ்சாலையில், கெடா, ஜித்ராவிற்கு அருகில் நிகழ்ந்தது.
வாகனத்தின் இயந்திரப் பகுதியிலிருந்து புகை வரத் தொடங்கிய நிலையில், தீ திடீரென்று பரவியதால், வாகனத்தைச் செலுத்திய நபர், மிக துரிதமாகத் தடம் மாறி, அவசரத் தடத்திற்குச் செலுத்தி, அந்த டொயோட்டா அல்பார்ட் வாகனத்தை நிறுத்தினார்.
வாகனம் நின்ற அடுத்த கணமே கணவன் மனைவியும் காரை விட்டு மின்னல் வேகத்தில் வெளியேறினர். பலத்த வெடிப்பு சத்தங்களுடன் தீ, வாகனத்தின் நாலாபுறமும் சூழ்ந்து கொண்ட நிலையில் தீயின் ஜுவாலையில் சிக்குவதிலிருந்து இருவரும் உயிர் தப்பினர் என்று ஜித்ரா தீயணைப்பு நிலையத் தலைவர் நூர் அஸார் தஜுடின் தெரிவித்தார்.
சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்புக் குழுவினர் வாகனத்தில் கொழுந்து விட்டு எரிந்த தீயை சுமார் 20 நிமிடத்தில் முழுமையாகக் கட்டுப்படுத்தியதாக அவர் குறிப்பிட்டார்.