புக்கிட் பெர்தாஜம், மார்ச்.17-
மளிகைக் கடை நடத்தி வரும் அந்நிய நாட்டவரை மிரட்டி 8 ஆயிரம் ரிங்கிட் பணம் கேட்டதாகக் கூறப்படும் அரசியல் கட்சி ஒன்றின் உதவித் தலைவர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
பினாங்கு, புக்கிட் மெர்தாஜம், தாமான் அரோவானா என்ற இடத்தில் வங்காளதேசி ஒருவர் மிரட்டப்பட்டது தொடர்பில் கிடைக்கப் பெற்ற தகவலின் அடிப்படையில் அந்த நபர், நேற்றிரவு செபராங் பிறை தெங்கா மாவட்ட போலீஸ் நிலையத்திற்கு வரவழைக்கப்பட்டு இரவு 9.45 மணியளவில் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஊராட்சி மன்ற உறுப்பினராக இருக்கும் சம்பந்தப்பட்ட அரசியல்வாதியும், மேலும் இரு அமலாக்க அதிகாரிகளும் கைது செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது.
அந்த கடை வங்காளதேசியின் மனைவியான மலேசியப் பெண்ணின் பெயரில் இருப்பதாக நம்பப்படுகிறது. அந்நிய நாட்டவரை வேலைக்கு வைத்திருப்பதாகக் கூறி, அந்த மளிகைக் கடையின் பொருட்கள் கடந்த ஜனவரி மாதம் பறிமுதல் செய்யப்பட்டதாகவும் தெரிய வந்துள்ளது.