ஷிவ்புரி, மார்ச்.20-
மத்திய பிரதேசத்தில் படகு கவிழ்ந்த விபத்தில் 3 குழந்தைகள் உள்பட 6 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மாயமான ஒரு சிறுமியை தேடும் பணி தொடர்கிறது. ஷிவ்புரி மாவட்டம் ஹனியாதானா போலீஸ் எல்லைக்குட்பட்ட மட்டதில்லா அணைப் பகுதியில் கோவில் ஒன்று அமைந்துள்ளது. இந்தக் கோவிலில் தரிசனம் செய்வதற்காக நேற்று முன்தினம் மாலை 15 பேருடன் படகு ஒன்று சென்றுள்ளது.
படகு திடீரென கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில், 8 பேரை உள்ளூர் மக்கள் பத்திரமாக மீட்டனர். 7 பேர் தண்ணீரில் மூழ்கி மாயமாகினர். இது தொடர்பாக போலீசார் மீட்பு பணியில் இரவு பகலாக ஈடுபட்டனர்.
இதில், 3 குழந்தைகள் உள்பட 6 பேர் சடலமாக மீட்கப்பட்டனர். மீட்கப்பட்டவர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். எனினும் 15 வயது சிறுமியின் உடல் மட்டும் இன்னும் மீட்கப்படவில்லை. தேடும் பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.