புத்ராஜெயா, மார்ச்.20-
நம்பிக்கை மோசடி குற்றத்திற்காகத் தனக்கு விதிக்கப்பட்ட தண்டனையை ரத்து செய்யக் கோரி, மூவார் எம்.பி. சையிட் சாடிக் அப்துல் ரஹ்மான் செய்து கொண்டுள்ள மேல்முறையீடு மீதான விசாரணையை புத்ராஜெயா, அப்பீல் நீதிமன்றம் மீண்டும் ஒத்தி வைத்திருப்பது குறித்து அந்த இளம் எம்.பி. தனது அதிருப்தியை இன்று வெளிப்படுத்தியுள்ளார்.
தனக்கு நீதி நிலைநாட்டப்பட வேண்டும் என்று தாம் முன்னெடுத்துள்ள இந்தப் போராட்டம், ஒரு குறுகிய காலத்தைக் கொண்டது அல்ல. மாறாக, கடந்த 5 ஆண்டு காலமாகக் காத்திருப்பதாக முன்னாள் இளைஞர் விளையாட்டுத்துறை அமைச்சரான சையிட் சாடிக் குறிப்பிட்டார்.
வழக்கை அரசு தரப்பில் முன்னெடுத்து நடத்தும் துணை பப்ளிக் பிராசிகியூட்டர், உடல் சுகவீனம் அடைந்திருப்பதாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து இந்த மேல்முறையீட்டு வழக்கு விசாரணை, வரும் ஏப்ரல் 17 ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
கோலாலம்பூர் உயர் நீதிமன்றம் தனக்கு விதித்துள்ள 7 ஆண்டு சிறை, நான்கு பிரம்படித் தண்டனை மற்றும் 10 மில்லியன் ரிங்கிட் அபராதத் தொகையை ரத்து செய்யக் கோரி, சையிட் சாடிக், அப்பீல் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளார்.