குவாந்தான், மார்ச்.21-
ஏப்ரல் 26 ஆம் தேதி புக்கிட் ஜாலில் தேசிய அரங்கில் ஸ்ரீ பகாங் மற்றும் ஜோகூர் தாருல் தாக்ஸிம் (JDT) அணிகளுக்கு இடையிலான மலேசியக் கிண்ண கால்பந்து இறுதியாட்டத்திற்கான புதிய தேதி மாற்றம், ரசிகர்கள் அரங்கிற்குச் செல்ல மேலும் வாய்ப்பளிக்கும்.
ஸ்ரீ பகாங் கால்பந்து கிளப்பின் (SPFC) தலைமை நிர்வாக அதிகாரி, டத்தோ முகமட் சுபிஃயான் அவாங் அவ்வாறு கூறியிருக்கிறார். முன்னதாக இறுதியாட்டம் ஏப்ரல் 12 தேதி நிர்ணயிக்கப்பட்டிருந்தது. ஆயினும் அச்சமயத்தில் பலர் இன்னமும் ஹரிராயா கொண்டாட்டத்தில் திளைத்திருப்பர். அந்நிலையில் அவர்கள் இறுதியாட்டத்தைக் காண அரங்கிற்குச் செல்வது சிரமமாக இருக்கலாம்.
எனவே, ஸ்ரீ பகாங்கின் ஆதரவாளர்கள் மட்டுமல்லாமல் ஜேடிடி ரசிகர்களுக்கும் மேலும் வாய்ப்பு வழங்க ஏதுவாக இறுதியாட்டம் மறு அட்டவணையிடப்பட்டுள்ளது.
“அதனால்தான் அடுத்த ஏப்ரல் 26 ஆம் தேதி இறுதியாட்டத்திற்கு மிகவும் பொருத்தமான தேதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் இரு அணிகளுக்கும் அதிக நேரம் தயார் செய்து தீவிர பயிற்சியில் ஈடுபட அது வாய்ப்பளிக்கும்.
மிகவும் பிரசித்தி பெற்ற மலேசியக் கிண்ண இறுதியாட்டத்தில் இரு அணிகளும் வெளிப்படுத்தும் தரமான ஆட்டத்தை நாங்கள் காண விரும்புகிறோம்,” என்று அவர் கூறினார்.
நேற்று, மலேசிய கால்பந்து லீக் (MFL) ஏப்ரல் 26 அன்று மலேசியக் கிண்ண இறுதியாட்டத்திற்கான புதிய தேதி மாற்றத்தை அறிவித்தது.
ஸ்ரீ பஹாங்கிலிருந்து அதிகாரப்பூர்வ கோரிக்கையையும் JDTயின் ஒப்புதலையும் பெற்ற பிறகு மறுபரிசீலனை செய்யப்பட்டு தேதி மாற்றம் செய்யப்பட்டது.