ரவூப். மார்ச்.21
மொத்தம் 13.42 கிலோ எடை கொண்ட போதைப்பொருளை விநியோகிப்பதற்காக பகாங், ரவூப்பிற்கு வந்த ஓர் இந்திய தம்பதியர் உட்பட நால்வரை போலீசார் கைது செய்தனர்.
நேற்று முன்தினம் புதன்கிழமை பிற்பகல் 3.30 மணியளவில் ரவூப், ஜாலான் பாசாரில் வாகனங்கள் நிறுத்தும் இடத்தில் போலீசார் மேற்கொண்ட திடீர் சோதனை நடவடிக்கையில் ஒரு தம்பதியர் உட்பட நால்வர் பிடிபட்டதாக பகாங் மாநில போலீஸ் தலைவர் டத்தோஶ்ரீ யாஹ்யா ஒத்மான் தெரிவித்தார்.
ஷாபு வகையைச் சேர்ந்த போதைப்பொருள், ஒரு வகை சீன தேயிலையான Guanyinwang லேபலைக் கொண்ட பொட்டலத்தில் ஷாபு AB போதைப்பொருள் உட்பட பல வகையான போதைப்பொருட்கள் அந்த தம்பதியரிடமிருந்து கைப்பற்றப்பட்டதாக இன்று ரவூப் போலீஸ் தலைமையகத்தில் நடைபெற்ற செய்தியாளர்கள் கூட்டத்தில் டத்தோஶ்ரீ யாஹ்யா மேற்கண்டவாறு கூறினார்.
சம்பந்தப்பட்ட இந்திய தம்பதியர், சிலாங்கூர் பந்திங்கைச் சேர்ந்தவர்கள் ஆவர். ரவூப்பில் போதைப்பொருளை ஒப்படைப்பதற்காக வந்த போது கணவனும் மனைவியும் பிடிபட்டனர். பிடிபட்ட இதர இரண்டு நபர்கள், அந்த தம்பதியரிடமிருந்து போதைப்பொருளைப் பெற்றுச் செல்ல வந்தவர்கள் என்று நம்பப்படுகிறது.
அத்தம்பதியரிமிருந்து கைப்பற்றப்பட்ட 13.42 கிலே எடை கொண்ட போதைப்பொருளின் மொத்த மதிப்பு 4 லட்சத்து 21 ஆயிரத்து 286 ரிங்கிட்டாகும். கைப்பற்றப்பட்ட போதைப்பொருளின் மொத்த அளவு, 26 ஆயிரத்து 331 போதைப்பித்தர்கள் பயன்படுத்தக்கூடியதாகும் என்று டத்தோஶ்ரீ யாஹ்யா தெரிவித்தார்.
பிடிபட்ட தம்பதியரில் 45 வயது நபருக்கு ஏற்கனவே குற்றப்பதிவு உள்ளது. அவரின் 42 வயது மனைவி, Amphetamine வகையைச் சேர்ந்த போதைப்பொருள் உட்கொண்டிருப்பது சிறுநீர் பரிசோதனையில் தெரியவந்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
நால்வர் பிடிபட்டது மூலம் நிஸ்சான் நவாரா மற்றும் டொயோட்டா வியோஸ் ரகத்திலான இரு வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக அவர் விளக்கினார்.