கோலாலம்பூர், மார்ச்.22-
கோலாலம்பூர், ஜாலான் மஸ்ஜிட் இந்தியாவில் வீற்றிருக்கும் தேவி ஸ்ரீ பத்ரகாளியம்மன் கோவில் விவகாரத்திற்கு இன்னம் தீர்வு காணப்படவில்லை. ஆனால், அந்த கோவில் நிலத்தில் நிர்மணிக்கப்படவிருக்கும் பள்ளிவாசலின் அடிக்கல் நாட்டு விழாவிற்கு பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் ஆர்வப்பட்டு, அறிக்கை வெளியிடுவது ஏன் என்று Lawyers for Liberty கேள்வி எழுப்பியுள்ளது.
இவ்விவகாரம் தொடர்பான பேச்சுவார்த்தை இன்னும் முற்றுப் பெறவில்லை. ஆனால், அன்வாரின் அறிக்கை, அவசர கோலத்தில் வெளியிடப்பட்டுள்ளதாக கருத வேண்டியுள்ளது என்று Lawyers for Liberty அமைப்பின் நிர்வாக இயக்குநர் ஸைட் மாலேக் தெரிவித்தார்.
நில விவகாரம் தொடர்பாக கோவில் தரப்பினரும், கோலாலம்பூர் மாநகர் மன்றமான டிபிகேஎல்லும் இன்னமும் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வரும் வேளையில் வரும் மார்ச் 27 ஆம் தேதி அடிக்கால் நாட்டு விழாவிற்கு அன்வார் அவசரப்படுவது ஏன் என்று ஸைட் மாலேக் வினவியுள்ளார்.
இவ்விவகாரம் மீதான பேச்சுவார்த்தை நடைபெறுவதற்கு உரிய சந்தர்ப்பத்தையும், நேரத்தையும் வழங்குவதற்கு அன்வார் ஏன் விரும்பவில்லை? என்று ஸைட் மாலேக் இன்று வெளியிட்டுள்ள ஓர் அறிக்கையில் வினவினார்.
கோவில் இடத்தை மாற்றி, அந்த இடத்தில் பள்ளிவாசல் கட்டுவது ஏற்புடையது என்ற அன்வாரின் கூற்றை தங்கள் தரப்பினர் ஏற்றுக் கொள்ள முடியாது என்று ஸைட் மாலேக் மேலும் தெளிவுபடுத்தினார்.
“ஒரு சீர்திருத்தவாதி என்று சொல்லப்படும் பிரதமருக்கு இது பொருத்தமான நிலைப்பாடா? பல்வேறு மதங்கள் மற்றும் பல கலாச்சாரங்களைக் கொண்ட நமது நாட்டின் நலன்களுக்கு, இது ஏற்புடைய செயல்தானா? என்று ஸைட் மாலேக் வினவினார்.
“கோயில் ‘அனுமதியின்றி’ கட்டப்பட்டுள்ளது என்ற அன்வரின் கூற்று, உண்மையில் தவறானது ஆகும். காரணம், கடந்த 2008 ஆம் ஆண்டு கோலாலம்பூர் மாநகர் மன்றமான டிபிகேஎல்லின் அறிவுறுத்தலின் பேரிலும், அவர்களின் எழுத்துப்பூர்வ அனுமதியுடனும், கோவில் அதன் அசல் இடத்திலிருந்து சில நூறு அடி தொலைவில் உள்ள அதன் தற்போதைய இடத்திற்கு மாற்றப்பட்டது,” என்பதை அன்வாரின் மேலான கவனத்திற்குத் தாம் கொண்டு வருவதாக ஸைட் மாலேக் வாதிட்டார்.
தங்களைப் பொறுத்தவரையில் ஜாலான் மஸ்ஜிட் இந்தியாவில் உள்ள தேவி ஸ்ரீ பத்ரகாளியம்மன் கோவில், அதன் தற்போதைய இடத்திலேயே தொடர்ந்து நிலைநிறுத்தப்பட வேண்டும் என்றும், புதிய பள்ளிவாசல் அருகிலுள்ள காலியான இடத்தில் கட்டப்பட வேண்டும் என்றும் ஸைட் மாலேக் வலியுறுத்தினார்.
“சுருங்கச் சொன்னால், கோவில் வீற்றிருக்கும் தற்போதைய இடத்திலேயே தொடர்ந்து இருப்பதற்கு அனுமதிக்கப்பட வேண்டும். கோவிலுக்கு அடுத்து காலியாக உள்ள இடத்தில் பள்ளிவாசலைக் கட்டுவதே இதற்கான சரியான தீர்வாகும் என்று ஸைட் மாலேக் தனது அறிக்கையில் கேட்டுக் கொண்டுள்ளார்.