வாஷிங்டன், மார்ச்.22-
புளோரிடாவில் உள்ள ஆர்லாண்டோ சர்வதேச விமான நிலையத்திற்கு 57 வயதான அலிசன் லாரன்ஸ், தனது நாய் டைவின்னுடன் சென்றுள்ளார். அவர் கொலம்பியாவுக்கு விமானத்தில் பயணம் செய்ய திட்டமிட்டு இருந்தார். ஆனால் அவரது செல்லப்பிராணிக்கு உரிய பயண ஆவணங்கள் ஏதும் இல்லை. இதனால் விமானத்தில் செல்லப் பிராணியுடன் செல்ல அனுமதி மறுக்கப்பட்டது.
அதனால் விரக்தியடைந்த அந்த பெண் நாயை விமான நிலையக் குளியலறையில் தண்ணீரில் மூழ்கடித்து கொன்றுள்ளார். நாயின் உடலை பிளாஸ்டிக் பையில் போட்டு விட்டு கிளம்பி உள்ளார். பின்னர் அவர், திட்டமிட்டப்படி கொலம்பியாவுக்கு விமானத்தில் சென்று விட்டார். சிறிது நேரத்திற்குப் பிறகு, விமான நிலைய ஊழியர் ஒருவர் பெண்கள் கழிப்பறையில் இறந்த நாயைக் கண்டுபிடித்தார்.
இந்த தகவல் விமான நிலைய உயர் அதிகாரிகள் வரை சென்றது. அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்து விசாரித்தனர். விசாரணையில் நாய் நீரில் மூழ்கி இறந்தது உறுதி செய்யப்பட்டது. நாயை மூழ்கடித்துக் கொன்ற அலிசன் லாரன்ஸை போலீசார் கைது செய்தனர். அவர் மீது விலங்குகளைக் கொடுமைப்படுத்தியதாக வழக்குப்பதிவு செய்யப்பட்டது. அவர் 5,000 ஆயிரம் டாலர்கள் அபராதம் செலுத்திய பின் ஜாமினில் விடுவிக்கப்பட்டார்.