பெட்டாலிங் ஜெயா, மார்ச்.23-
மார்ச் 22-ஆம் தேதி, கோயில் கட்டுமானம் குறித்த பிரச்சனை தொடர்பாக சமய போதகர் பிஃர்டாவுஸ் வோங்கிற்கு கொலை மிரட்டல் விடுத்ததாக நம்பப்படும் ஒரு நபரை போலீசார் கைது செய்தனர் என பெட்டாலிங் ஜெயா மாவட்ட காவல் துறைத் தலைவர் ஏசிபி ஷாருல்நிஸாம் ஜாபார் கூறினார். மார்ச் 21-ஆம் தேதி பிற்பகல் 4:18 மணியளவில், தகாத வார்த்தைகள் கொண்டு கொலை மிரட்டல்கள் அடங்கிய குரல் பதிவைப் பெற்ற பிறகு, உள்ளூர் நபர் ஒருவர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்தப் புகாரின் அடிப்படையில், போலீசார் மார்ச் 22-ஆம் தேதி பிற்பகல் 1:30 மணியளவில் சந்தேக நபரைக் கைது செய்தனர்.
கூடுதலாக, மிரட்டல்களை அனுப்ப பயன்படுத்தப்பட்டதாக நம்பப்படும் ஒரு கைப்பேசியும் பறிமுதல் செய்யப்பட்டது. இந்த வழக்கு தொடர்பான கூடுதல் தகவல்களைப் பொது மக்கள் காவல் துறையிடம் தெரிவிக்கலாம் என்று அவர் கூறினார். கோயில் கட்டுமானப் பிரச்சனை தொடர்பாக தனது அறிக்கைக்குப் பிறகு முகநூலில் கொலை மிரட்டல் விடுத்ததாகக் கூறி, சுயாதீன போதகர் காவல் நிலையத்தில் புகார் அளித்ததாக ஊடகங்கள் முன்பு செய்தி வெளியிட்டன.