கோலாலம்பூர், மார்ச்.23-
இன்று அதிகாலை தலைநகர், ஜாலான் கூச்சிங்கில் காவல் துறையினரின் சோதனையிலிருந்து தப்பி ஓடிய ஒருவர் தேடப்பட்டு வருகிறார்.
அந்த நபர் செந்தூலில் உள்ள தாமான் ரெயின்போவில் இருந்து ஜாலான் கூச்சிங் வரை நிகழ்ந்த கேபிள் திருட்டு வழக்கில் சந்தேகிக்கப்படுவதாக செந்தூல் மாவட்ட போலீஸ் தலைவர் அசிஸ்டன் கமிஷனர் அஹ்மாட் சுகார்னோ முகமட் கூறினார். அந்த நபரின் வாகனத்தை ரோந்து போலீஸ் உறுப்பினர்கள் துரத்தினர். ஜாலான் கூச்சிங்கை அடைந்ததும், சந்தேக நபர் தனது வாகனத்தைச் சாலையோரத்தில் நிறுத்திவிட்டுச் சென்றதாக அஹ்மாட் சுகார்னோ இன்று ஒர் அறிக்கையில் தெரிவித்தார்.
அந்த வாகனத்திற்குள் கேபிள் திருடும் கருவிகளும் கண்டுபிடிக்கப்பட்டன. அவரைத் தேடும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. கைவிடப்பட்ட வாகனத்தை ஆய்வு செய்ததில், அந்த வாகனம் ஒரு வாடகை வாகன நிறுவனத்தின் பெயரில் பதிவு செய்யப்பட்டுள்ளது. 27 வினாடிகள் நீடிக்கும் வீடியோ பதிவின் மூலம் இந்தச் சம்பவம் சமூக ஊடகங்களில் வைரலானது. சந்தேக நபரின் வாகனம் மற்றொரு வாகனத்தில் மோதியதாக நம்பப்படுகிறது. தப்பி ஓடிய சந்தேக நபரைப் பிடிக்க போலீசார் முயன்றதால் துரத்தும் சம்பவங்களும் நடந்தன என அஹ்மாட் சுகார்னோ மேலும் குறிப்பிட்டார்.