கோலாலம்பூர், மார்ச்.23-
புஸ்பாகோம் வாகனப் பரிசோதனை மையத்தின் வரிசை முறையை மேம்படுத்துவது ரன்னர் எனப்படும் இடைத் தரகர்களின் பங்கை நிறுத்தப் போதுமானதாக இருக்கும் என்று போக்குவரத்து அமைச்சர் அந்தோணி லோக் தெரிவித்துள்ளார். புஸ்பாகோம் வரிசை முறையில் உள்ள பலவீனங்களால்தான் இடைத் தரகர்கள் பிரச்சனை உருவானது என்றும், அதனால்தான் அதை மேம்படுத்த வேண்டும் என்றும் அவர் கூறினார். நாட்டின் ஒவ்வொரு புஸ்பாகோம் கிளையிலும் அதிகாரிகளை நியமிப்பதன் மூலம் மட்டும் இந்த பிரச்சனை தீராது என்றும் அவர் கூறினார்.
புஸ்பாகோம் தங்கள் எண் வரிசை முறையில் உள்ள பலவீனங்களை சரி செய்ய வேண்டும். ஒரு நாளில் ஏராளமான வரிசைகளைப் பதிவு செய்யக்கூடிய நபர்கள் இருப்பதை முன்பே கண்டறிந்துள்ளோம். ஒரே CHASE எண்ணை பயன்படுத்தி வெவ்வேறு வாகன பதிவு எண்களை பதிவு செய்கின்றனர். புஸ்பாகோம் இதை மேம்படுத்த வேண்டும். நாட்டின் ஒவ்வொரு புஸ்பாகோம் கிளையிலும் சாலை போக்குவரத்து துறை ஜேபிஜே அதிகாரிகளை நியமிப்பது சாத்தியமில்லை. அவ்வாறு செய்தால், ஜேபிஜேயில் அதிகமான வளங்களை பயன்படுத்த வேண்டியிருக்கும். எனவே, அமைப்பை மேம்படுத்த வேண்டும், அதிகாரிகளை நியமிக்கக் கூடாது என்று அவர் கூறினார்.