கோவில் நிலம் விற்கப்பட்டது குறித்து டிபிகேஎல் எதற்காகத் தெரியப்படுத்த வேண்டும் – அம்னோ இளைஞர் பிரிவுத் தலைவர் கேள்வி

கோலாலம்பூர், மார்ச்.24-

கோலாலம்பூர், ஜாலான் மஸ்ஜிட் இந்தியாவில் வீற்றிருக்கும் தேவி ஸ்ரீ பத்ரகாளியம்மன் கோவில் வீற்றிருக்கும் நிலத்தை கோலாலம்பூர் மாநகர் மன்றமான டிபிகேஎல் விற்பனை செய்தது தொடர்பில் கோவில் நிர்வாகத்திடம் எதற்காகத் தெரியப்படுத்த வேண்டும் என்று அம்னோ இளைஞர் பிரிவுத் தலைவர் டாக்டர் அக்மால் சாலே கேள்வி எழுப்பியுள்ளார்.

அந்த நிலம், சம்பந்தப்பட்ட கோவிலுக்குச் சொந்தமானது அல்ல என்பது உறுதியாகத் தெரிந்த பின்னர் அந்த நில விற்பனை குறித்து அவர்களிடம் எதற்காக டிபிகேஎல் தெரியப்படுத்த வேண்டும் என்று டாக்டர் அக்மால் வினவினார்.

கோவில் நிலம் விற்கப்பட்டது தொடர்பில் ஆலய நிர்வாகத்திடம் டிபிகேஎல் தெரியப்படுத்தவில்லை என்று வாதிடும் மஇகா தரப்பினரை அம்னோ இளைஞர் பிரிவுத் தலைவர் கடுமையாகச் சாடினார்.

அந்த நிலம் கோலாலம்பூர் மாநகர் மன்றத்திற்குச் சொந்தமானது. அந்த நிலம் யாரிடம் விற்கப்பட்டது, எதற்காக விற்கப்பட்டது முதலிய விவரங்களைக் கோவில் நிர்வாகத்திடம் சொல்ல வேண்டிய அவசியமோ, அவசரமோ டிபிகேலுக்கு இல்லை.

இவ்விவகாரத்தில் மஇகா தரப்பினர், டிபிகேஎல்லை குற்றஞ்சாட்டுவதை ஒரு போதும் ஏற்றுக்கொள்ள முடியாது என்று டாக்டர் அக்மால் இன்று வெளியிட்டுள்ள ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

நிலத்தின் உரிமையாளர், யாரிடம் நிலத்தை விற்பனை செய்கிறார் என்பது அவரின் விருப்பமாகும். அந்த நிலத்தில் ஒட்டுண்ணியாக ஒட்டிக் கொண்டு இருப்பவர்களிடம் சொல்ல வேண்டிய அவசியம் டிபிகேஎல்லுக்குக் கிடையாது என்பதை மஇகா தரப்பினருக்குத் தெளிவுப்படுத்தத் தாம் விரும்புவதாக டாக்டர் அக்மால் குறிப்பிட்டுள்ளார்.

WATCH OUR LATEST NEWS