கோலாலம்பூர், மார்ச்.24-
போலீசாரின் சாலைத் தடுப்புச் சோதனை நடவடிக்கையின் போது, போலீஸ்காரர் ஒருவர், வாகனமோட்டியிடமிருந்து ஏதோ ஒன்றை வாங்குவதைப் போல தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வரும் காணொளி தொடர்பில் சம்பந்தப்பட்ட மூன்று போலீஸ்காரர்களின் நடவடிக்கை குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
அந்த சாலைச் சோதனை நடவடிக்கையின் போது, போலீஸ்காரர்களுக்கு நிர்ணயிக்கப்பட்ட விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள் மீறப்பட்டுள்ளதா? என்பது குறித்து தற்போது இலாகா அளவிலான விசாரணை நடத்தப்பட்டு வருவதாக செர்டாங் மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி ஏ.ஏ அன்பழகன் தெரிவித்துள்ளார்.
நேற்று ஞாயிற்றுக்கிழமை , செர்டாங் ஶ்ரீ கெம்பாஙானில் உள்ள தெ மைன்ஸ் சாலைச் சந்திப்பில் நடத்தப்பட்ட போலீசாரின் சாலைத் தடுப்பு சோதனையின் போது வாகனமோட்டியிடமிருந்து போலீஸ்காரர் ஒருவர் ஏதோ ஒன்றை ரகசியமாக வாங்குவதை அந்த காணொளி சித்தரிக்கிறது.
விசாரணைக்கு வழி விடும் வகையில் இது குறித்து ஆருடம் கூற வேண்டாம் என்று பொது மக்களுக்கு அன்பழகன் அறிவுறுத்தியுள்ளார்.