ஜார்ஜ்டவுன், மார்ச்.24-
கடந்த மார்ச் 7 ஆம் தேதி பினாங்கு, தாசேக் குளுகோர், தாமான் செப்பாடு ஜெயாவில் ஓர் உணவகத்திற்கு வெளியே அதன் நிர்வாகியான ஒரு மியன்மார் பிரஜை, கும்பல் ஒன்றினால் துரத்திச் சென்று வெட்டிக் கொல்லப்பட்ட சம்பவத்திற்குப் பின்னணியில் அந்த நபருக்கும், தாக்குதல் நடத்திய நபருக்கும் இடையிலான முன்விரோதப் பழிவாங்கல் செயலே காரணமாகும் என்று போலீசார் தெரிவித்தனர்.
கொலை செயப்பட்ட நபர், தாசேக் குளுகோரில் உள்ள அவரின் குடும்பம் மற்றும் அவர்களின் பூர்வீக நாட்டில் உள்ள குடும்பத்தினர் ஆகியோருக்கு இடையில் நிலவி வந்த குடும்பப் பிரச்னை, பகைமையாக மாறி, அவரைக் கொலை செய்யும் அளவிற்கு பழிவாங்கல் செயலாக உருவெடுத்துள்ளது என்று பினாங்கு போலீஸ் தலைவர் டத்தோ ஹம்ஸா அஹ்மாட் தெரிவித்தார்.
உணவகத்தின் முன் உள்ள பிரதானச் சாலையில், வாகனத்தில் வந்த முகமூடி கும்பல் நடத்திய இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பில் 30 க்கும் 40 க்கும் இடைப்பபட்ட வயதுடைய எட்டு ஆடவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
எண்மரின் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்ட வேளையில் பிரதான சந்தேகப் பேர்வழியைத் தாங்கள் தேடி வருவதாக அவர் மேலும் கூறினார்.