ஜார்ஜ்டவுன், மார்ச்.24-
சிகிச்சைக்கு வரும் பெண்களைச் சோதனை என்ற பெயரில் ஆடை களையச் செய்து, வக்கிர செயலில் ஈடுபட்டதாக நம்பப்படும் மருத்துவர் ஒருவருக்கு எதிராக மூன்று விசாரணை அறிக்கைகள் தயாரிக்கப்பட்டுள்ளதாக பினாங்கு போலீஸ் தலைவர் டத்தோ ஹம்ஸா அஹ்மாட் தெரிவித்தார்.
அந்த மூன்று அறிக்கைகள், மாநில பிராசிகியூட்டர் அலுவலகத்திற்கு அனுப்பப்பட்டுள்ளன. தற்போது பிராசிகியூட்டர் அலுவலகத்தின் அடுத்த உத்தரவுக்காக பினாங்கு போலீசார் காத்திருப்பதாக அவர் குறிப்பிட்டார்.
43 வயதுடைய அந்த மருத்துவருக்கு எதிராக மூன்று வெவ்வேறு போலீஸ் புகார்களைப் பாதிக்கப்பட்டப் பெண்கள் அளித்துள்ளனர். அதன் அடிப்படையில் அந்த மருத்துவர் இரண்டு முறை கைது செய்யப்பட்டு தடுப்புக் காவலில் வைக்கப்பட்டு, விசாரணை செய்யப்பட்டுள்ளார் என்று டத்தோ ஹம்ஸா மேலும் கூறினார்.
கடந்த பிப்ரவரி 20 ஆம் தேதி மருத்துவரின் பிடியில் சிக்கிய 25 வயது பெண் அளித்த முதலாவது போலீஸ் புகாரைத் தொடர்ந்து அடுத்தடுத்த சம்பவங்கள் குறித்து பாதிக்கப்பட்டப் பெண்கள் புகார் அளிக்கத் தொடங்கியதாக அவர் தெரிவித்தார்.