கோலாலம்பூர், மார்ச்.25-
தேசிய பூப்பந்து பயிற்சி இயக்குநர் ரெக்ஸி மைனகி, மலேசிய பூப்பந்து சங்கத்தில் (BAM) இரட்டையர் பிரிவு இயக்குநராக தனது முந்தைய பதவிக்குத் திரும்புவார். அந்த இந்தோனசியர் இனி ஆடவர் இரட்டையர், பெண்கள் இரட்டையர் மற்றும் கலப்பு இரட்டையர் அணிகளுக்குப் பொறுப்பேற்பார் என்று நேற்று நடைபெற்ற சங்கக் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது.
டென்மார்க் பயிற்சியாளர் கென்னத் ஜோனாசென், ஆண்கள் மற்றும் பெண்கள் ஒற்றையர் பிரிவுகளைக் கையாள்வார். ஒற்றையர் பிரிவு இயக்குநராகப் பணிகளை மேற்கொள்வார்.
ஜோனாசனின் ஒற்றையர் பிரிவில் நிபுணத்துவத்தையும், இரட்டையர் பிரிவில் ரெக்ஸியின் விரிவான அனுபவத்தையும் கருத்தில் கொண்டு, பயிற்சித் துறையை நெறிப்படுத்தவும் செயல்திறனை மேம்படுத்தவும் சங்கத்தின் முயற்சிகளின் ஒரு பகுதியாக இந்த நடவடிக்கை இருப்பதாக BAM மின் இடைக்காலத் தலைவர் டத்தோ வி. சுப்பிரமணியம் கூறினார்.
இரு பயிற்சியாளர்களும், உயர் நிலை வீரர்கள் முதல் ஜூனியர் மட்டத்தில் உள்ளவர்கள் வரை, அந்தந்த துறைகளின் வளர்ச்சியை மேற்பார்வையிடுவார்கள். இருவரும் அந்தந்த துறைகளில் நிபுணர்கள்.
இந்த நடைமுறை மாற்றம் முற்றிலும் புதியதல்ல. ஏனெனில் ரெக்ஸி முன்பு 2021 இல் BAM இல் மீண்டும் இணைந்தபோது இரட்டையர் பிரிவு வீரர்களின் முன்னேற்றத்தை மேற்பார்வையிட்டார். அப்போது ஒற்றையர் பிரிவின் பொறுப்பில் பயிற்சி இயக்குநராக இருந்த வோங் சூங் ஹானுடன் இணைந்து பணியாற்றினார் என சுப்ரமணியம் சுட்டிக் காட்டினார்.