வங்காளதேசத்தில் ராணுவம் ஆட்சியைக் கைப்பற்றுகிறதா?

டக்கா, மார்ச்.25-

வங்கதேசத்தில் முகமது யூனுஸ் தலைமையிலான இடைக்கால அரசுக்கு எதிராக புரட்சியில் ஈடுபட்டு வரும் ராணுவம் ஆட்சியைப் பிடிக்க திட்டமிட்டுள்ளதாக அந்நாட்டு சமூக வலைதளங்களில் செய்திகள் பரவி வருகின்றன. அந்நாட்டில், முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு எதிராக மாணவர்கள் போராட்டம் வெடித்ததால், அவர் இந்தியாவில் தஞ்சம் அடைந்துள்ளார். அதனைத் தொடர்ந்து, முகமது யூனுஸ் தலைமையில் இடைக்கால அரசு அமைக்கப்பட்டது.

ஹசீனாவுக்கு எதிராக போராட்டத்தை முன்னெடுத்த மாணவர்கள் ஒன்றிணைந்து, தேசிய குடிமக்கள் கட்சி என்ற புதிய அரசியல் கட்சியை கடந்த மாதம் தொடங்கினர். வங்கதேச அரசியலில் அந்நாட்டு ராணுவம் குறுக்கிடுவதாக அக்கட்சியினர் குற்றஞ்சாட்டி உள்ளனர்.

அந்நாடு முழுவதும் பல இடங்களில் ராணுவ வீரர்கள் மற்றும் பாதுகாப்பு படையினர் நிறுத்தப்பட்டு உள்ளனர். இதனையடுத்து, அந்நாட்டு ஆட்சியை ராணுவம் கைப்பற்றுகிறது என்ற யூகங்கள், அங்கு சமூக வலைதளங்களில் வேகமாக பரவியுள்ளது. இதன் மையப்புள்ளியாக ராணுவ தளபதி வாக்கர் உஜ் ஜமான் உள்ளார். ஆனால், இந்த யூகங்கள் குறித்து முகமது யூனுசோ அல்லது ராணுவ தளபதியோ எதுவும் விளக்கமளிக்கவில்லை.

அதேநேரத்தில் ராணுவ அதிகாரிகளுடன், வாக்கர் உஜ் ஜமான் அடிக்கடி நடத்தி வரும் சந்திப்புகள், யூகங்களுக்கு மேலும் தீனி போடுகிறது. அதேநேரத்தில், பயங்கரவாதிகள் தாக்குதல் அதிகரித்து வருவதால், பாதுகாப்பு படையினர் விழிப்புடன் இருக்க வேண்டியது முக்கியம் என ராணுவ தளபதி கூறி வருகிறார். இது தொடர்பாகவே, அதிகாரிகளுடன் அவர் ஆலோசனை நடத்தியதாக தகவல் வெளியாகி உள்ளது.

ராணுவ அதிகாரிகளுடன், ராணுவ அடிக்கடி நடத்தும் சந்திப்புகள் மூலம் நாட்டின் ஆளும் இடைக்கால அரசுக்கும், ராணுவத்திற்கும் இடையே விரிசல் ஏற்பட்டு உள்ளதையே காட்டுகிறது என அந்நாட்டு அரசியல் கண்காணிப்பாளர்கள் கருதுகின்றனர். கடந்த சில நாட்கள் முன்பு வரை, வங்கதேச ராணுவத்தில் உள்ள பாகிஸ்தான் ஆதரவு அதிகாரிகள் மூலம், வாக்கர் உஜ் ஜமான் பதவி நீக்கம் செய்யப்படலாம் என செய்திகள் வந்தன. ஆனால், தற்போது இவரின் ஆதிக்கமே உயர்ந்துள்ளதாகக் கூறப்படுகிறது.

WATCH OUR LATEST NEWS