சிரம்பான், மார்ச்.25-
2025 ஆம் ஆண்டு நெகிரி செம்பிலான் மாநில தமிழ்ப்பள்ளிகளின் ஹோக்கி அணியின் பாராட்டு விழா, நேற்று சிரம்பான், கிளானா ரிசோர்ட்டில் வெகு சிறப்பாக நடைபெற்றது.
இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினராக நெகிரி செம்பிலான் ஆட்சிக்குழு உறுப்பினரும், ரெப்பா சட்டமன்ற உறுப்பினருமான வீரப்பன் சுப்பிரமணியம் கலந்து சிறப்பித்தார்.
கடந்த ஜனவரி மாதம் புக்கிட் ஜாலில் தேசிய ஹாக்கி அரங்கில் நடைபெற்ற தமிழ்ப்பள்ளிகளுக்கு இடையிலான தேசிய ஹாக்கிப் போட்டியில் மகளிர் பிரிவில் நெகிரி செம்பிலான் அணியினர் சாம்பியனாக வாகை சூடினர். இதேபோன்று ஆண்கள் பிரிவில் நெகிரி செம்பிலான் அணியினர் 2 ஆவது மற்றும் 6 ஆவது இடத்திற்குத் தேர்வாகினர்.
மிகச் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தி, சாம்பியனாக வாகை சூடிய நெகிரி செம்பிலான் தமிழ்ப்பள்ளிகளைச் சேர்ந்த மகளிர் அணியினருக்கும், 2 மற்றும் 6 ஆவது இடத்திற்கு தேர்வான ஆண்கள் அணியிருக்கும் வீரப்பன் தமது பாராட்டுகளையும் வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொண்டார்.
அதே வேளையில் ஏற்கனவே தாம் வாக்குறுதி அளித்ததைப் போல, இந்த பாராட்டு விழாவிற்கான 15 ஆயிரம் ரிங்கிட் செலவினத்தையும் வீரப்பன் தனது சொந்த செலவில் ஏற்றுக் கொண்டார்.
நெகிரி செம்பிலான் தமிழ்ப்பள்ளிகளின் ஒத்துழைப்புடன் இந்நிகழ்வை கோலபிலா தமிழ்ப்பள்ளி ஏற்பாடு செய்தது. கோலபிலா மாவட்ட கல்வி அதிகாரி ஹாஜி கமானிஸாம் பின் ஹாஜி திண்டிக், ஹோக்கி கழகத்தின் தலைவர் டோமினிக் சவரிமுத்து, ஆசிரியர்கள், ஹாக்கி பயிற்றுனர்கள், மாணவர்கள் என இந்த பாராட்டு விழாவில் சுமார் 150 பேர் கலந்து கொண்டனர்.