புத்ராஜெயா, மார்ச்.25-
நீதிமன்றத்தில் முன்னுக்குப் பின் முரணாக சாட்சியம் அளித்ததாக நம்பப்படும் இரண்டு பெண்களை மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான எஸ்பிஆர்எம் கைது செய்துள்ளது.
அவ்விரு பெண்களும் இன்று காலையில் புத்ராஜெயாவில் உள்ள மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில், மஜிஸ்திரேட் இர்ஸா ஸுலைக்கா புர்ஹானுடின் முன்னிலையில் நிறுத்தப்பட்டு, அவர்களை இன்று மார்ச் 25 ஆம் தேதி முதல் நாளை 26 ஆம் தேதி வரை, இரண்டு தினங்களுக்கு தடுத்து வைப்பதற்கு எஸ்பிஆர்எம் நீதிமன்ற ஆணையைப் பெற்றுள்ளது.
30 மற்றும் 60 வயதுடைய அந்த இரு பெண்களும் நேற்று புத்ராஜெயாவில் உள்ள எஸ்பிஆர்எம் தலைமையத்திற்கு வாக்குமூலம் அளிப்பதற்கு அழைக்கப்பட்ட போது அவர்கள் கைது செய்யப்பட்டனர்.
லஞ்ச ஊழல் தொடர்பான ஒரு வழக்கில் ஏற்கனவே எஸ்பிஆர்எம் விசாரணையில் அளித்த வாக்குமூலத்திற்கும், அவர்கள் நீதிமன்றத்தில் அளித்த வாக்குமூலத்திற்கும் நிறைய முரண்பாடுகள் கண்டு பிடிக்கப்பட்டன.
எஸ்பிஆர்எம் விசாரணையின் போது அவ்விரு பெண்களும் அளித்த வாக்குமூலம் நீதிமன்ற சாட்சியத்துடன் ஒரே மாதிரியாக இல்லாமல், முன்னுக்குப் பின் முரணாக, சாட்சியத்தை மாற்றி, மாற்றி வாக்குமூலம் அளித்ததால், அவர்களை மீண்டும் விசாரணை செய்வதற்கு ஏதுவாக கைது செய்யப்பட்டுள்ளதாக எஸ்பிஆர்எம் வெளியிட்டுள்ள ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது.
இதனிடையே அவ்விரு பெண்களும் தற்போது எஸ்பிஆர்எம்மின் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டு இருப்பதை அதன் விசாரணைப் பிரிவு மூத்த இயக்குநர் டத்தோ ஸைனுல் டாருஸ் உறுதிப்படுத்தினார்.
அவ்விரு பெண்களும் 2009 ஆம் ஆண்டு SPRM சட்டத்தின் 27 ஆவது பிரிவு 2 ஆவது விதியின் கீழ் தடுத்து வைக்கப்பட்டு விசாரணை செய்யப்பட்டு வருகிறார்கள் என்று அவர் விளக்கினார்.