தேவி ஸ்ரீ பத்ரகாளியம்மன் ஆலயத்திற்கு அருகாமையிலேயே 4 ஆயிரம் சதுர அடியில் புதிய நிலம்

கோலாலம்பூர், மார்ச்.25-

கோலாலம்பூர், ஜாலான் மஸ்ஜிட் இந்தியாவில் வீற்றிருக்கும் தேவி ஸ்ரீ பத்ரகாளியம்மன் ஆலயத்திற்கு, அருகாமையிலேயே 4 ஆயிரம் சதுரடியில் புதிய நிலம் வழங்கப்படுவதற்கு அரசாங்கம் இணக்கம் தெரிவித்துள்ளதாக கூட்டரசுப் பிரதேசத்திற்கான பிரதமர் துறை அமைச்சர் டாக்டர் ஸாலேஹா முஸ்தபா அறிவித்துள்ளார்.

தேவி ஸ்ரீ பத்ரகாளியம்மன் ஆலயம் தற்போது வீற்றிருக்கும் இடத்திலிருந்து 50 மீட்டர் தூரத்தில் புதிய நிலம் வழங்கப்படுவதற்கு கோலாலம்பூர் மாநகர் மன்றமான டிபிகேஎல் ஒப்புதல் வழங்கியிருப்பதாக டாக்டர் ஸாலேஹா தெரிவித்தார்.

கோலாலம்பூர் மாநகர் மன்றம் மற்றும் கோவில் நிர்வாகத்தினர் ஆகியோருக்கு இடையில் நடைபெற்ற பேச்சு வார்த்தையின் போது கோவிலை இடம் மாற்றம் செய்யப்படுவதற்கு இணக்கம் காணப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

அதே வேளையில் புதிய இடத்தில் கோவிலை இட மாற்றம் செய்யப்படும் வரையில் அந்த ஆலயம் அகற்றப்படாது. அதன் பூஜைகள் உட்பட சமய நிகழ்வுகள், எந்தவொரு இடையூறின்றி நடைபெறுவதற்கு அனுமதிக்கப்படும் என்று இன்று நடைபெற்ற செய்தியாளர்கள் கூட்டத்தில் டாக்டர் ஸாலேஹா இதனைக் குறிப்பிட்டார்.

முன்னதாக, டாக்டர் ஸாலேஹா மற்றும் கோலாலம்பூர் மாநகர் மன்றத் தலைவர் டத்தோ பண்டார் டாக்டர் மைமுனா முகமட் ஷாரிப் ஆகியோர் ம.இகா தேசியத் துணைத் தலைவர் டத்தோஸ்ரீ எம். சரவணன், தொழில்முனைவோர் மற்றும் கூட்டுறவு மேம்பாட்டுத் துறை துணை அமைச்சர் டத்தோஸ்ரீ R. ரமணன், பத்து எம்.பி. P. பிரபாகரன் மற்றும் ஆலயப் பொறுப்பாளர்கள் ஆகியோருடன் சந்திப்பு ஒன்றை நடத்தினார்.

சம்பந்தப்பட்ட ஆலயத்திற்கு மாற்று நிலம் வழங்கப்பபட்டது இதுவே முதலாவதாகவும், இறுதியாகவும் இருக்கும். இந்த கோவில் சர்ச்சை விவகாரத்தை மற்ற வழிபாட்டுத் தளங்களுக்கு ஒரு முன்னுதாரணமாக பயன்படுத்த முடியாது என்பதையும் டாக்டர் ஸாலேஹா தெளிவுபடுத்தினார்.

இச்சந்திப்பின் போது, ஆலயம் இடம் மாற்றம் செய்யப்படுவதற்கான புதிய நிலத்திற்கான டிபிகேஎல்லின் ஒப்புதல் கடிதத்தையும் ஆலயப் பொறுப்பாளர்களிடம் அமைச்சர் டாக்டர் ஸாலேஹா ஒப்படைத்தார்.

WATCH OUR LATEST NEWS