கோலாலம்பூர், மார்ச்.26-
வரும் ஏப்ரல் மாதம் முதல் சாரா உதவித் திட்டத்தின் கீழ் அரசாங்க உதவித் தொகையைப் பெறுகின்றவர்களின் எண்ணிக்கை, 7 லட்சம் பேரிலிருந்து 54 லட்சம் பேராக அதிகரிக்கப்பட்டுள்ளது என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் இன்று அறிவித்துள்ளார்.
அதே வேளையில் சாரா உதவித் திட்டத்தின் கீழ் கடந்த 2024 ஆம் ஆண்டு ஆண்டுக்கு 1,200 ரிங்கிட் பெற்று வந்தவர்கள், வரும் ஏப்ரல் முதல் 2,100 ரிங்கிட்டை பெறுவர் என்று நிதி அமைச்சருமான டத்தோஸ்ரீ அன்வார் அறிவித்தார்.
சாரா உதவித்தொகை, 75 விழுக்காடு அதிகரிக்கப்பட்டுள்ளதாக பிரதமர் குறிப்பிட்டார். சாரா உதவித் தொகையைப் பெறுவதற்கு இந்த ஆண்டு முதல் 54 லட்சம் பேர் தகுதி பெற்றுள்ளனர்.
இந்த மாதாந்திர உதவித் தொகை, பெறுநர்களின் மைகாட் அட்டையில் வரவு வைக்கப்படும். இதன் மூலம் மாதம் தோறும் தங்கள் குடும்பத்தினருக்குத் தேவையான அத்தியாவசியப் பொருட்களை அவர்கள் சபா, சரவாக், கூட்டரசு பிரதேசம் லாபுவன் உட்பட நாடு முழுவதும் பதிவு செய்யப்பட்ட மளிகைக் கடைகளில் வாங்கிக்கொள்ள முடியும் என்று டத்தோஸ்ரீ அன்வார் அறிவித்தார்.