நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டார் ஜம்ரி வினோத் – இரண்டு நாள் தடுப்புக் காவல்

கங்கார், மார்ச்.28-

கோலாலம்பூர், தேவி ஸ்ரீ பத்ரகாளியம்மன் ஆலயம் இடம் மாற்ற விவகாரத்தில், ஆலய நிர்வாகத்தினருக்கு எதிராக நிந்தனைத்தன்மையில், அடவாடித்தனமான விமர்சனங்களை, தனது முகநூலில் பதிவிட்டு, பொது அமைதிக்கு மிரட்டலை ஏற்டுத்தியதற்காகக் கைது செய்யப்பட்டுள்ள சர்ச்சைக்குரிய சமயப் போதகர் ஜம்ரி வினோத் இன்று காலையில் பெர்லிஸ், கங்கார் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டார்.

மாஜிஸ்திரேட் ஆனா ரொஸானா முகமட் நோர் முன்னிலையில் நிறுத்தப்பட்ட ஜம்ரி வினோத்தை விசாரணைச் செய்வதற்கு ஏதுவாக அந்த மதம் மாறியை, 2 நாள் தடுப்புக் காவலில் வைப்பதற்கு போலீஸ் துறைக்கு அனுமதி அளிக்கப்பட்டது.

இன்று மார்ச் 28 ஆம் தேதி தொடங்கி, நாளை 29 ஆம் ஆம் தேதி வரை இரண்டு நாட்களுக்கு தடுப்புக் காவல் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

கருப்பு ஜேக்கெட் அணிந்த நிலையில், கைவிலங்கிடப்பட்டு, பலத்த போலீஸ் பாதுகாப்புடன் கங்கார் நீதிமன்றத்திற்கு இன்று காலை 8.45 மணிக்கு கொண்டு வரப்பட்ட ஜம்ரி வினோத், 1948 ஆம் ஆண்டு தேச நிந்தனைச் சட்டம் மற்றும் 1998 ஆம் ஆண்டு தொடர்பு, பல்லூடகச் சட்டம் ஆகியவற்றின் கீழ் தடுத்து வைக்கப்பட்டு விசாரணை செய்வதற்கு, போலீசார் நீதிமன்ற ஆணையைப் பெற்றனர்.

ஜம்ரி சார்பில் ஸூஹாயிர் அஹ்மாட் ஸாகுவான் தலைமையில் 10 வழக்கறிஞர்கள் நீதிமன்றத்தில் ஆஜராகினர்.

தேவி ஸ்ரீ பத்ரகாளியம்மன் ஆலயம் இடம் மாற்றம் விவகாரத்தில், அரசாங்கம் தலையிட்டதன் பேரில், கோவில் நிர்வாகத்திற்கும், நில உரிமையாளருக்கும் இடையில் சுமூகமாக தீர்வு காணப்பட்ட நிலையில், ஜம்ரி வினோத், இன சர்ச்சையை ஏற்படுத்தும் வகையில் தனது முகநூலில் கடும் விமர்சனங்களை அள்ளி தெளித்துள்ளதாகக் கூறப்படுகிறது.

ஊரார் நிலத்தில் கோவிலை கட்டிவிட்டு, பிறகு நிலத்தைச் சொந்தம் கொண்டாடுவதற்கு, நில உரிமையாளரிடம் சண்டையிடுவதும், மல்லுக் கட்டிக் கொண்டு நிற்பதும் இந்துக்களுக்கு வாடிக்கையாகி விட்டது என்று நக்கலாக, தனக்கே உரிய ஏகத்தாள வார்த்தைகளைப் பிரயோகித்து, ஜம்ரி சீண்டிப் பார்த்துள்ளார்.

ஜம்ரியின் இந்த நிந்தனைக்குரிய விமர்சனங்கள், இந்து ஆலயங்களையும், /அதனை வழிநடத்தி வரும் பொறுப்பாளர்களையும் நிந்திக்கும் தன்மையில் உள்ளது என்றும் பொது அமைதியைச் சீர்குலைப்பதாக உள்ளது என்றும், அவர் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் டாங் வாங்கி போலீஸ் நிலையத்தில் நேற்று முன்தினம் புகார் செய்யப்பட்டது.

ஏற்கனவே தைப்பூசக் காவடியாட்டதை விமர்சித்த ஜம்ரி வினோத், இந்துக்கள் மதுபோதையில் காவடிகளுடன் தள்ளாடுகின்றனர் என்றும், பேயாட்டம் ஆடுகின்றனர் என்றும் கடும் விமர்சனம் செய்ததற்காக அவருக்கு எதிராக நாடு தழுவிய நிலையில் 900 க்கும் மேற்பட்ட போலீஸ் புகார்கள் அளிக்கப்பட்டன என்பது குறிப்பிட்டத்தக்கது.

WATCH OUR LATEST NEWS