தவறான வியாக்கியானங்கள் மத்தியில் கோவில் வரலாற்றை நேரடியாகப் பதிவு செய்தார் அம்பிகா

கோலாலம்பூர், மார்ச்.29-

கோலாலம்பூர், ஜாலான் மஸ்ஜிட் இந்தியா, ஜாலான் முன்ஷி அப்துல்லாவில் வீற்றிருக்கும் தேவி ஸ்ரீ பத்ரகாளியம்மன் கோவில் நிலம் தொடர்பாக தவறான தகவல்களும், வியாக்கியானங்களும் எழுந்த போதிலும் ஆலயத்தின் நெடுங்கால வரலாற்றை எந்தவொரு தரப்பினரும் மூடி மறைத்து விட முடியாது என்று ஆலய நிர்வாகக் குழுவைப் பிரதிநிதிக்கும் வழக்கறிஞர் அம்பிகா ஸ்ரீனிவாசன் இன்று நினைவுறுத்தினார்.

தேவி ஸ்ரீ பத்ரகாளியம்மன் ஆலயம் வீற்றிருக்கும் நிலத்தின் அருகில் கடந்த வியாழக்கிழமை மடானி பள்ளிவாசல் நிர்மாணிப்பதற்கு அடிக்கல் நாட்டு விழா நடைபெற்று இருப்பது மூலம், அனைத்து தரப்பினருக்கும் இடையில் இவ்விவகாரம் ஒரு சுமூகமான தீர்வை எட்டியுள்ளதாக அம்பிகா குறிப்பிட்டார்.

ஆனால், கோவிலுக்கு எதிரான அடிப்படையற்ற குற்றச்சாட்டுகளும், வியாக்கியானங்களும் இன்னமும் நிலவி வருவதாக மலேசிய வழக்கறிஞர் மன்றத்தின் முன்னாள் தலைவர் அம்பிகாவும், Lawyers For Liberty அமைப்பின் இணை நிறுவனர் என். சுரேந்திரனும் தெரிவித்தனர்.

சம்பந்தப்பட்ட தரப்பினரின் இந்தக் குற்றச்சாட்டுகள் கோவிலின் சட்டப்பூர்வ அந்தஸ்து மற்றும் உரிமைகளைத் தவறாக சித்தரிப்பதாக உள்ளது என்று அம்பிகாவும், சுரேந்திரனும் குறிப்பிட்டனர்.

இத்தகைய தவறான சித்தரிப்பு, கோவில் வீற்றிருக்கும் நிலம், அதன் வரலாற்றுப் பின்னணி மற்றும் உண்மையான நிலையை மூடிமறைப்பதாக உள்ளது என்று அம்பிகா குறிப்பிட்டார்.

இந்தக் கோவில் நாடு சுதந்திரம் பெறுவதற்கு நீண்ட காலத்திற்கு முன்பே கட்டப்பட்டதாகும். அந்த கோவில் கிட்டத்தட்ட அதே வட்டாரத்தில்தான் இன்றும் உள்ளது.

இருப்பினும் கடந்த 2008 ஆம் ஆண்டில் கோலாலம்பூர் மாநகர் மன்றமான டிபிகேஎல்லின் உத்தரவின் பேரில் புதிய சாலைகளை அமைப்பதற்கு ஏதுவாக ஆலய நிலப்பகுதியில் சில சீரமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

இந்த சீரமைப்புப் பணிகளை மேற்கொள்வதற்கு டிபிகேஎல் முழு அனுமதி வழங்கியதுடன், அந்த சீரமைப்புப் பணிக்கான அங்கீகாரத்தையும் எழுத்துப்பூர்வமாக வழங்கியுள்ளது.

இன்று பரவலாகக் கூறப்படும் வியாக்கியானங்களைப் போல, தேவி ஸ்ரீ பத்ரகாளியம்மன் ஆலயம், சட்டவிரோதமான நிலத்தில் வீற்றிருக்கும் ஒரு கோவில் என்றால், அந்த ஆலயத்தை சீரமைப்பு செய்வதற்கும், சாலைகள் திறக்கப்படுவதற்கும், போதுமான நிலத்தை ஒதுக்கிக் கொடுப்பதற்கும் சிபிகேஎல் எவ்வாறு அங்கீகாரம் வழங்கியது? அந்த மேம்பாட்டுத் திட்டத்திற்கு எவ்வாறு ஒப்புதல் அளித்தது? என்று அம்பிகா கேள்வி எழுப்பினார்.

அந்த கோவில் நிலம், டிபிகேஎல்லால் சட்டப்பூர்வமாக அங்கீகரிக்கப்பட்டு, ஏற்றுக் கொள்ளப்பட்ட ஒரு கோவில் என்பதால் இந்த அங்கீகாரத்தையும், அனுமதியையும் டிபிகேஎல் வழங்கியது.

அப்படி சட்டப்பூர்வமான பல ஆண்டு காலமாக செயல்பட்டு வரும் ஒரு கோவில், இன்று எப்படி சட்டவிரோதக் கோவிலாக மாறியது என்று அம்பிகா வினவினார்.

இந்த விவகாரம் நீதிமன்றத்திற்கு கொண்டு செல்லப்படுமானால், கோவில் நிலம் விற்பனை செய்யப்பட்டதில் உள்ள இந்த சட்ட சிக்கல்கள் 2005 ஆம் ஆண்டு தேசிய பாரம்பரியச் சட்டம் மற்றும் பிற சட்டங்களின் கீழ் உள்ள சிக்கல்கள் பிரயோகிக்கப்பட்டால் அவை கோவிலுக்கு சாதகமாக அமைந்து, அந்த பழமை வாய்ந்த கோவில் பாதுக்கப்படும் என்பதை சம்பந்தப்பட்ட தரப்பினருக்கு அம்பிகா இன்று நினைவுறுத்தினார்.

WATCH OUR LATEST NEWS