மியன்மார், மார்ச்.29-
மியன்மார் மற்றும் அண்டை நாடுகளான தாய்லாந்து, வியட்னாம் ஆகியவற்றில் நேற்று வெள்ளிக்கிழமை உலுக்கிய சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் குறைந்தது 152 பேர் கொல்லப்பட்டனர். உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை பத்தாயிரத்தைத் தாண்டலாம் அஞ்சப்படுகிறது.
மியன்மாரின் மூன்று நகரங்களில் 144 பேர் மாண்டனர். 732 பேர் காயமுற்றதாகவும் முதற்கட்ட ஆய்வில் தெரியவந்துள்ளதாக அந்நாட்டின் ராணுவ அரசாங்கம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், உயிரிழப்பு 10,000தைத் தாண்டக்கூடும் என அமெரிக்க நிலவியல் ஆய்வு நிலையம் மதிப்பிட்டுள்ளது.
கட்டடங்கள், பாலங்கள், விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டுக் கோபுரம் இடிந்து விழுந்ததுடன் சாலைகளிலும் விரிசல்கள் ஏற்பட்டன.
7.7 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம், சாகாயிங் நகரின் வடமேற்கில் ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சில நிமிடங்களுக்குப் பிறகு அதே பகுதியில் 6.4 ரிக்டர் அளவிலான நில அதிர்வு ஏற்பட்டது.
இதனிடையே, தாய்லாந்தில் குறைந்தது எட்டுப் பேர் உயிரிழந்துவிட்டனர் என்றும் பலரைக் காணவில்லை என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.