கூலிம், மார்ச்.29-
கூலிம் மாவட்ட இந்தியர்களின் மத்தியில் குற்றச்செயல்கள் தலை தூக்கியுள்ளதாக கூலிம் மாவட்ட இந்திய அதிகாரிகள் தெரிவித்தனர். அதில் இந்தியர்களின் மத்தியில் போதைப்பொருள் குறிப்பாக 20 வயது முதல் 30 வயதுடைய இளைஞர்கள் போதைப்பித்தர்களாக மாறி வருவதாக கூலிம் மாவட்ட போதைப்பொருள் பிரிவின் தலைமை அதிகாரி ஏஎஸ்பி காந்தன் அண்ணாமலை குறிப்பிட்டார். இப்பழக்கத்திற்கு அடிமையாகும் இளைஞர்களின் பின்னனியை ஆராய்ந்துப் பார்க்கும் பொழுது அவர்களுக்கு நிரந்தரமான வேலை வாய்ப்புகள் இல்லாதது ஒரு காரணமாக இருப்பதாக அவர் கூறினார்.

நேற்று 218 வது போலீஸ் தினத்தை முன்னிட்டு கூலிம் மாவட்ட இந்திய அதிகாரிகள் ஒன்றிணைந்து லுனாஸ் வெல்லஸ்லி தோட்ட ஸ்ரீ மஹா மாரியம்மன் தேவஸ்தானத்தில் ஏற்பாடு செய்த சிறப்புப் பிராத்தனையில் கலந்துக் கொண்ட ஏஎஸ்பி காந்தன் மேற்கண்டவாறு தெரிவித்தார். அத்துடன் நண்பர்களின் ஆதிக்கத்தினாலும் பல இளைஞர்கள் போதைப் பொருளைப் பின்நோக்கிச் செல்வதாக காந்தன் கூறினார் .

அது மட்டுமின்றி, கூலிம் மாவட்ட மக்கள் பலர் “ஸ்கேம்” குற்றச்செயலினால் இளைஞர்கள் முதல் பெரியோர்கள் வரை அதிக அளவில் பாதிக்கப்பட்டு வருவதை சுட்டிக் காட்டினார் கூலிம் மாவட்ட வணிக குற்ற பிரிவின் தலைமை அதிகாரி ஏஎஸ்பி அன்பழகன். எனவே, பொதுமக்கள் ஒவ்வொரு நிமிடமும் விழிப்புணர்வுடன் செயல்படுவத்தோடு தேவையற்ற அகப்பக்கங்கள், அறியாத தொலைபேசி அழைப்புகள், சமுக வளைத்தளங்களில் காணப்படும் விளம்பரங்கள் ஆகியவற்றை தவிர்ப்பது நல்லது என்றார் . போலீஸ் தினத்தை முன்னிட்டு நடைபெற்ற சிறப்புப் பிராத்தனையில் அவ்விரு அதிகாரிகளும் தகவல்களை நிருபர்களிடம் பகிர்ந்துக் கொண்டனர்.

கூலிம் மாவட்ட இந்திய காவல்துறையினர் பாயா பெசார் வட்டாரத்தில் அமைந்துள்ள வட மலேசிய காமாட்சி தொண்டூழியர் சங்கத்திலுள்ள குழந்தைகளைச் சந்தித்து அவர்களுக்கு சிறு நன்கொடை வழங்கியத்தோடு அக்குழந்தைகளுடன் சில தகவல் பரிமாற்றங்களும் செய்யப்பட்டத்தாக இந்திய அதிகாரிகள் குறிப்பிட்டனர் .

போலீஸ் தின சிறப்புப் பிரார்த்தனையில் கெடா மாநில தலைமை காவல் நிலையத்தின் பிரதிநிதியாக சுங்கை பட்டாணி கோலா மூடா காவல் நிலையத்தின் துணை தலைமை அதிகாரி சூப்ரிண்டென்டன் சரவணன் சண்முகம் வருகையளித்திருந்தார். அவருடன் இணைந்து கூலிம் லுனாஸ் காவல் நிலையத்தின் தலைவர் பல்பர் சிங் மற்றும் கூலிம் மாவட்ட போக்குவரத்து பிரிவின் விசாரணை அதிகாரி இன்ஸ்பெக்டர் விக்னேஸ்வரன் பூபாலன் என 250க்கும் மேற்பட்டோர் கலந்துக் கொண்டுச் சிறப்பித்தனர்.
