கோலாலம்பூர், மார்ச்.30-
மலேசியாவில் எதிர்மறையான அல்லது நச்சுத்தன்மையான வேலைச் சூழல் இருந்தால் 59 விழுக்காடு ஊழியர்கள் வேலையில் இருந்து விலகிவிடத் தயாராக உள்ளனர். நேர்மறையான பணியிடக் கலாச்சாரத்தை ஊக்குவிக்காத நிறுவனங்களின் வேலை வாய்ப்புகளை 48 விழுக்காட்டினர் நிராகரிக்கின்றனர். சக ஊழியர்களுடன் நல்ல உறவு இல்லாதபோதும், நிறுவனத்தில் தங்களுக்கு உரிய இடம் இல்லை என்று உணரும்போதும் பலர் வேலையை விடத் தயாராக உள்ளதாக Randstad’s 2025 Workmonitor ஆய்வறிக்கை தெரிவிக்கின்றது.
பணியிடத்தில் ஒரு சமூக உணர்வும், சக ஊழியர்களுடன் ஒரு நல்ல தொடர்பும் இருக்கும்போது ஊழியர்கள் சிறப்பாகச் செயல்படுகிறார்கள். வலுவான பணியிட நட்புக்காக சிலர் குறைந்த சம்பளத்தை ஏற்றுக் கொள்ளவும் தயாராக இருக்கிறார்கள். அலுவலகத்திற்குத் திரும்பும்போது பணியாளர்கள் ஒரே குடும்பம் போல இணைந்திருப்பதாக உணர்கிறார்கள். ஆனால், அதிக நேரம் அலுவலகத்தில் செலவிட கட்டாயப்படுத்தப்பட்டால் பலர் வேலையை விடத் தயாராக உள்ளனர் என அந்த ஆய்வு மேலும் கூறுகிறது.
நேர்மறையான பணியாளர் அனுபவத்தை வளர்ப்பதில், தனிநபர்கள் நம்பிக்கையை உணர்வதையும் தங்கள் சக ஊழியர்களுடன் ஒத்துழைப்பதை அனுபவிக்கும் பணியிடத்தை உருவாக்குவதும் இதில் அடங்கும். நெகிழ்வான வேலை விருப்பங்கள் பல ஊழியர்களுக்கு முக்கிய முன்னுரிமையாக உள்ளன. பணியிடத்தில் அமைகின்ற குழு உறுப்பினர்கள் ஒற்றுமையாக , மகிழ்ச்சிகரமாக இணைவதற்கும் உறவுகளை உருவாக்குவதற்கும் நிறுவனங்களும் மேலாளர்களும் வாய்ப்புகளை உருவாக்குவது முக்கியம் என அந்த ஆய்வின் முடிவில் தெரிவிக்கப்படுகிறது.