புத்ராஜெயா, மார்ச்.30-
தன்னைத் தானே திவாலாக்கும் போக்கு மலேசியாவில் கவலை அளிக்கும் வகையில் அதிகரித்து வருகிறது. கடனைத் திருப்பிச் செலுத்த முடியாததால் அல்லது கடனைத் தவிர்க்க விரும்புவதால் பலர் நீதிமன்றத்தில் தாங்களாகவே திவாலாக்கிக் கொள்கிறார்கள். 2024 ஆம் ஆண்டில், இந்த எண்ணிக்கை 200 விழுக்காடு வரை அதிகரித்துள்ளதாக மலேசிய திவால் துறைத் தலைமை இயக்குநர் டத்தோ எம் பக்ரி அப்துல் மஜிட் குறிப்பிட்டார்.
திவால் துறை இந்த போக்கை தீவிரமாக எடுத்துக் கொண்டுள்ளது. தாங்களாகத் திவாலாகும் மனுக்களை தாக்கல் செய்வதற்கான முறைகளை ஆராய்ந்து வருகிறது. தற்போதைய நிலையில், இதற்குக் குறிப்பிட்ட வரம்பு எதுவும் இல்லை. இது பொறுப்பற்ற நபர்களால் தவறாகப் பயன்படுத்தப்படாமல் இருக்க, அரசு இரண்டாவது வாய்ப்புக் கொள்கையை மறுபரிசீலனை செய்து வருகிறது என்றார்.