சியோல், மார்ச்.30-
தென் கொரியாவின் தென்கிழக்குப் பகுதியைப் பேரழிவிற்குள்ளாக்கிய காட்டுத் தீ தொடர்பில் சந்தேக நபர் ஒருவரைக் கைது செய்துள்ளதாக தென் கொரிய அதிகாரிகள் இன்று உறுதிப்படுத்தியுள்ளனர். செய்தி நிறுவனமொன்று அதனைத் தெரிவித்துள்ளது.
56 வயதான நபர் மார்ச் 22 ஆம் தேதி காலை 11:25 மணியளவில் வடக்கு கியோங்சாங் மாகாணத்தில் உள்ள உசியோங் கவுண்டியில் உள்ள ஒரு குடும்ப கல்லறையில் மூதாதையர்களுக்கு மரியாதை செலுத்தும் நிகழ்ச்சியை நடத்திக் கொண்டிருந்தபோது தீயை ஏற்படுத்தியதாக குற்றம் சாட்டப்பட்டார்.
பல நாட்களாக வீசிய பலத்த காற்று மற்றும் வறண்ட வானிலையால் அன்டாங், சியோங்சாங், யோங்யாங் மற்றும் யோங்டியோக் போன்ற அருகிலுள்ள பகுதிகளுக்கு தீ வேகமாக பரவி, குறைந்தது 26 பேர் உயிரிழக்கக் காரணமானது.
யுனெஸ்கோவின் உலக பாரம்பரிய தளமான கவுன் கோயில், வீடுகள், தொழிற்சாலைகள் மற்றும் பிற வசதிகள் உட்பட சுமார் 4,000 கட்டிடங்களையும் தீ அழித்தது. எனினும், சந்தேக நபர் தனக்கு எதிரான குற்றச்சாட்டை மறுத்துள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
வட கியோங்சாங் மாகாணத்தில் வெள்ளிக்கிழமை மாலை 5 மணிக்குள் தீ முழுமையாகக் கட்டுப்படுத்தப்பட்டதாக கொரியா வனவியல் சேவை முன்பு அறிவித்தது. ஆயினும் சனிக்கிழமை இரவு தீ மீண்டும் எரியத் தொடங்கியது.
சுமார் 48,000 ஹெக்டேர் வனப்பகுதி அதாவது சியோல் நகரத்தின் அளவில் 80 சதவீதத்திற்கு சமமானது அது தென் கொரிய வரலாற்றில் மிக மோசமான காட்டுத் தீயாகும்.
தேசிய வன அறிவியல் நிறுவனம், தேசிய தடயவியல் சேவை மற்றும் தீயணைப்பு துறை ஆகியவற்றின் ஒத்துழைப்புடன் அடுத்த வார தொடக்கத்தில் கூட்டு விசாரணை நடத்த போலீசார் திட்டமிட்டுள்ளனர்.