ஈப்போ, மார்ச்.30-
2025 ஆம் ஆண்டுக்கான “ஓப் செலாமாட்” சோதனை நடவடிக்கையின் முதல் நாளில், கடந்த ஆண்டின் அதே காலக் கட்டத்துடன் ஒப்பிடும்போது விபத்துகளும் சம்மன் வழக்குகளும் முறையே 16 விழுக்காடு அதிகரித்துள்ளதாக புக்கிட் அமான் போக்குவரத்து புலனாய்வு, அமலாக்க துறையின் தலைமை இயக்குநர் முகமட் யுஸ்ரி ஹாசான் பஸ்ரி தெரிவித்தார். இருப்பினும், இறப்புகள் 21இல் இருந்து ஏழாகக் குறைந்துள்ளது என்றார்.
வட ஈப்போ சுங்கச் சாவடியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், மொத்தம் 2,040 விபத்துகள் பதிவாகியுள்ளதாகவும், இஃது 2024 ஆம் ஆண்டில் பதிவான 1,758 விபத்துகளை விட அதிகம் என்றும் குறிப்பிட்டார். நெடுஞ்சாலைகள், கூட்டரசுச் சாலைகள், நகரச் சாலைகள் ஆகியவை விபத்துகள் அதிகரித்த சாலை வகைகளில் அடங்கும் என அவர் மேலும் சொன்னார்.