நாட்டிங்ஹாம், ஏப்ரல்.02-
அந்தோனி எலங்காவின் ஒரே கோல், நாட்டிங்ஹாம் ஃபாரஸ்ட் அணி 45 ஆண்டுகளுக்குப் பிறகு முதல் முறையாக சாம்பியன்ஸ் லீக்கிற்குத் தகுதி பெறும் வாய்ப்பைப் பிரகாசப்படுத்திக் கொண்டுள்ளது. தனது முன்னாள் கிளப்பான மான்செஸ்டர் யுனைடெட்டுக்கு எதிரான இங்கிலிஷ் பிரிமியர் லீக் ஆட்டத்தில் எலங்கா அந்த வெற்றி கோலைப் புகுத்தினார். அந்த கோல் மூலம் நாட்டிங்ஹாம் 1-0 என்ற கோல் கணக்கில் வாகை சூடியது.
ஸ்வீடன் நாட்டு வீரரான எலங்கா, இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு ஓல்ட் ட்ராஃபோர்டை விட்டு வெளியேறினார். ஆட்டம் தொடங்கிய ஐந்தாவது நிமிடத்தில் அவர் அக்கோலைப் போட்டார். நாட்டிங்ஹாம் இடத்தில் விளையாடிய மான்செஸ்டர் யுனைடெட், தனது நிலையை மேம்படுத்தி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தத் தவறியது. யுனைடெட் இப்பருவ பிரீமியர் லீக்கில் இதுவரை 13 முறை தோல்வியடைந்துள்ளது. புள்ளிப் பட்டியலில் அது தற்போது 13 ஆவது இடத்தில் இருக்கிறது.
இவ்வேளையில், நாட்டிங்ஹாம் நிர்வாகி, நுனோ எஸ்பிரிடோ சாண்டோ, ஆட்டத்தில் தனது வீரர்களின் உற்சாகத்தைப் பாராட்டினார். மான்செஸ்டர் யுனைடெட் நிர்வாகி ரூபன் அமோரிம் தனது அணியின் நிலை குறித்து கவலை தெரிவித்தார். ஆட்டத்தில் வெற்றி பெற்ற நாட்டிங்ஹாம் தற்போது லீக் புள்ளிப் பட்டியலில் மூன்றாவது இடத்தில் உள்ளது.