புத்ரா ஹைட்ஸ் நிலத்தடி எரிவாயு குழாய் வெடிப்புச் சம்பவத்தில் பாதிக்கப்பட்டத் தொழிலாளர்களுக்கு மனிதவள அமைச்சின் அனுகூலங்கள்

கோலாலம்பூர், ஏப்ரல்.02-

புத்ரா ஹைட்ஸில் ஏற்பட்ட நிலத்தடி எரிவாயு குழாய் வெடிப்பால் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் மனித வள அமைக்சு தனது அனுதாபங்களைத் தெரிவித்துக் கொண்டது. இந்தச் சூழ்நிலையை எதிர்கொள்ளும் விதமாக, பாதிக்கப்பட்டவர்களுக்கு முழு ஆதரவை வழங்குவதற்காக அமைச்சின் கீழ் உள்ள துறைகளும் ஏஜென்சிகளும் மற்ற அரசாங்க அமைப்புகளுடன் இணைந்து செயல்பட அமைச்சு இயக்கியுள்ளது. மேலும், தொழிலாளர்களின் பாதுகாப்பை உறுதிச் செய்யவும், அவர்களின் மீட்பை விரைவுபடுத்தவும் நடவடிக்கைகள் எடுக்கப்படுவதை உறுதிச் செய்துள்ளது.

இந்தக் கோரச் சம்பவம் குறித்து தகவல் கிடைத்தவுடன், தொழில் பாதுகாப்பு, சுகாதாரத் துறை – JKKP விசாரணையைத் தொடங்கியது. உடனடி நடவடிக்கையாக, சம்பவ இடத்தில் உள்ள ஒவ்வொரு புளோக் valveவிலும் ஒரு தடை உத்தரவையும் ஐந்து தடை நோட்டீஸ்களையும் வழங்கியது. இந்த விதிகளை மீறினால் 5 இலட்சம் ரிங்கிட் வரை அபராதம் அல்லது அதிகபட்சம் இரண்டு ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்படும் என அமைச்சு இன்று வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிட்டது.

அதே நேரத்தில், சமூகப் பாதுகாப்பு அமைப்பான பெர்கேசோ, சம்பவத்தைப் பற்றி தகவல் கிடைத்தவுடன் புத்ரா ஹைட்ஸில் உள்ள தற்காலிக துயர் துடைப்பு மையத்திற்கும் சிலாங்கூரைச் சுற்றியுள்ள ஒன்பது மருத்துவமனைகளுக்கும் விரைந்து சென்று, இந்த சம்பவத்தால் மனதளவிலும் உடலளவிலும் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆதரவு உதவியை வழங்கியது. பாதிக்கப்பட்ட பெர்கேசோ சந்தாதாரர்களுக்கு அதன் ஊனமுற்றோர் திட்டத்தின் பலன்களைப் பெற அடையாளம் கண்டுள்ளது. இந்த சம்பவத்தில் சம்பந்தப்பட்ட எந்தவொரு பெர்கேசோ பங்களிப்பாளரும், தற்காலிக, நிரந்தர இயலாமை பலன்கள் உட்பட பெர்கேசோவின் சமூகப் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் உரிமைக் கோரல் தகுதியைச் சரி பார்க்கலாம். இஃது அவர்களுக்கு நேர்ந்திருக்கும் காயத்தின் அளவைப் பொறுத்தது எனவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

WATCH OUR LATEST NEWS