ஜார்ஜ்டவுன், ஏப்ரல்.03-
ரூமா முத்தியாராகு திட்டத்தின் கீழ் வீடு வாங்கியவர்களின் நலன் பாதுகாக்க பினாங்கு அரசு உறுதி பூண்டுள்ளது.
குறிப்பாக, ரூமா மு5ஹ்தியாராகு திட்டத்தின் கீழ் RMKu Quinton மற்றும் RMKu Sri Bayu ஆகிய வீடமைப்புத் திட்டங்களின் கட்டுமானத்தில் தாமதம் ஏற்பட்ட போதிலும், அந்த வீடமைப்புத் திட்டங்களில் வீடுகள் வாங்கியவர்களின் நலன்கள், எல்லா நிலைகளிலும் பாதுகாக்கப்படும் என்று பினாங்கு ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோஸ்ரீ சுந்தராஜு சோமு தெரிவித்தார்.
இந்த இரண்டு வீடமைப்புத் திட்டங்களிலும், வீடு வாங்கியவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருப்பதால் அவர்களின் கனவு இல்லமாக இருந்து வரும் அந்த வீடமைப்புத் திட்டங்கள், விரைந்து முடிக்கப்படுவதற்கு தொடர்ந்து தாம் முன்னுரிமை வழங்கி வருவதாக டத்தோஸ்ரீ சுந்தராஜு குறிப்பிட்டார்.
இரண்டு வீடமைப்புத் திட்டங்களும் உள்ளூர் மேம்பாட்டு நிறுவனத்தால் நிர்மாணிக்கப்பட்டன. எனினும் மேம்பாட்டு நிறுவனம் நிதி சிக்கல்கள் காரணமாக, குறித்த காலத்தில் கட்டி முடிப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக டத்தோஸ்ரீ சுந்தராஜு விளக்கினார்.
இது தொடர்பாக மேம்பாட்டாளர், வீடு வாங்கியவர்கள் மற்றும் குத்தகையாளர் ஆகியோருடன் தாம் தொடர் பேச்சுவார்த்தை மற்றும் சந்திப்புகளை நடத்தியிருப்பதையும் அவர் விளக்கினார்.
தவிர இன்னும் கட்டி முடிக்கப்படாத வீடமைப்புத் திட்டங்கள் என வகைப்படுத்த்கப்பட்டுள்ள இந்த இரண்டு வீடமைப்புத் திட்டங்கள் குறித்து வீடமைப்பு, ஊராட்சித்துறை அமைச்சின் தனியார் வீடமைப்புத் திட்டக் கண்காணிப்பு பிரிவின் உதவி தலைமை இயக்குநர் சுங் ஜெங் ஹாருடன் தாம் சந்திப்பு நடத்தியதாகவும் அறிக்கை ஒன்றைக் கோரியிருப்பதாகவும் டத்தோஸ்ரீ சுந்தராஜு விளக்கினார்.
சம்பந்தப்பட்ட வீடமைப்புத் திட்டங்கள் மேற்கொள்ளப்படும் இடத்திற்கு கடந்த மார்ச் 27 ஆம் தேதி நேரடி வருகை புரிந்த டத்தோஸ்ரீ சுந்தராஜு, அந்த வீடமைப்புத் திட்டங்களின் மேம்பாடுகளைப் பார்வையிட்டதுடன், அந்த வீடமைப்புத் திட்டங்கள் கட்டி முடிக்கப்படுவதில் பினாங்கு அரசு கொண்டுள்ள உறுதிப்பாட்டையும் விளக்கினார்.