அமெரிக்காவின் அதிரடி நடவடிக்கை – சிறப்புக் கூட்டத்திற்குத் தலைமையேற்கிறார் பிரதமர் அன்வார்

காஜாங், ஏப்ரல்.04-

மலேசியா பொருட்களுக்கு 24 விழுக்காடு பரஸ்பர வரியை விதித்து இருக்கும் அமெரிக்காவின் அதிரடி முடிவு தொடர்பாக விவாதிப்பதற்கு பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் இன்று சிறப்புக்கூட்டத்திற்கு தலைமையேற்கவிருக்கிறார்.

மலேசியாவுக்கு எதிராக அதன் இறக்குமதி பொருட்களுக்கான பரஸ்பர வரியை 24 விழுக்காடாக உயர்த்திய அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தலைமையிலான அரசாங்கத்தின் முடிவால் மலேசியாவின் வர்ததகம் மற்றும் பொருளாதாரத்திற்கு மிகப் பெரிய சவால்களும், நெருக்குதலும் ஏற்படலாம் என்று கூறப்படுகிறது.

மலேசியா உட்பட ஆசியான் வட்டார நாடுகளையும் உள்ளடக்கி 49 நாடுகளை ஒரு பட்டியலில் வைத்து, அதிகமான வரியை டொனால்டு டிரம்ப் நேற்று முன் தினம் அறிவித்து இருந்தார்.

இந்த வரி உயர்வினால் மலேசியாவில் தொழில்சாலைகள் மூடப்படும் அபாயம் இருப்பதாகவும், பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்கள் வேலை இழக்கலாம் என்றும் அஞ்சப்படுகிறது.

இந்நிலையில் அமெரிக்காவின் இந்த அதிரடி முடிவு குறித்து விவாதிப்பதற்கு அரசாங்கத்தின் முன்னணி அதிகாரிகள் சம்பந்தப்பட்ட சிறப்புக் கூட்டத்திற்கு நிதி அமைச்சருமான டத்தோஸ்ரீ அன்வார் இன்று மாலையில் தலைமையேற்கவிருக்கறார்.

WATCH OUR LATEST NEWS