கோலாலம்பூர், ஏப்ரல்.04-
மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான எஸ்பிஆர்எம் தலைமை ஆணையர் டான்ஶ்ரீ அஸாம் பாக்கியின் பதவிக் காலம் மேலும் ஒரு தவணைக்கு நீட்டிக்கப்படுகிறது.
இந்த நீட்டிப்பின் வாயிலாக, எஸ்பிஆர்எம்மில் தலைமைப் பொறுப்பை ஏற்றது முதல் அஸாம் பாக்கி, மூன்றாவது முறையாக பதவி காலம் நீட்டிக்கப்பட்டு, அந்தப் பதவியை தொடர்ந்து தற்காத்துக் கொள்ளவிருக்கிறார் என்று நிதியியல் செய்தி நிறுவனமான புளும்பேர்க் தெரிவித்துள்ளது.
அஸாம் பாக்கியின் பதவிக் காலத்தை மேலும் ஒரு தடவை நீட்டிப்பதற்கு பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் அங்கீகாரம் வழங்குவார் என்று எதிர்பார்க்கப்படுவதாக அந்த செய்தி நிறுவனம் ஆருடம் கூறியுள்ளது.
ஒப்பந்த அடிப்படையில் எஸ்பிஆர்எம் தலைமைப் பொறுப்பை ஏற்று வரும் அஸாம் பாக்கியின் பதவிக் காலம், வரும் மே மாதம் முடிவடைகிறது. இந்நிலையில் 62 வயதுடைய அஸாம் பாக்கியின் பதவி காலம், மேலும் 6 மாத காலத்திற்கு நீட்டிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அஸாம் பாக்கியின் பதவிக் காலம் நீட்டிக்கப்படுவது தொடர்பான அதிகாரப்பூர்வமான அறிவிப்பு, அடுத்த மாதம் முற்பகுதியில் அறிவிக்கப்படலாம் என்று கூறப்படுகிறது.