புத்ராஜெயா, ஏப்ரல்.06-
புத்ரா ஹைட்ஸில் எரிவாயு குழாய் வெடிப்பில் பாதிக்கப்பட்டவர்களுக்குத் தற்காலிகத் தங்குமிடங்களில் ஒன்றாக சிப்பாங்கில் கோத்தா வாரிசானில் உள்ள பங்சாபூரி ஶ்ரீ சூரியாவை மாற்றியமைக்கும் சிலாங்கூர் மாநில அரசாங்கத்தின் திட்டத்தை வீட்டுவசதி, ஊராட்சி மேம்பாட்டு அமைச்சின் துணை அமைச்சர் டத்தோ அய்மான் அதிரா சாபு வரவேற்றுள்ளார். சிலாங்கூர் அரசாங்கத்தின் மானியத்துடன் கூடிய சிலாங்கூர் ஸ்மார்ட் வாடகை வீடுகள் திட்டத்தில் இந்தச் சம்பவத்தால் பாதிக்கப்பட்ட 116 குடும்பங்களுக்கு தங்குமிடம் வழங்க முடியும் என்று அவர் கூறினார். இது குறித்து சிலாங்கூர் மகளிர், சமூக நலன் மேம்பாடு ஆட்சிக்குழு உறுப்பினர் அன்பாஃல் சாரி நேற்று தனக்குத் தெரிவித்ததாக அவர் கூறினார். சம்பவ இடத்திற்கும் இந்த தங்குமிடத்திற்கும் இடையே சுமார் 30 கிலோமீட்டர் தூரம் உள்ளது என்பதை நாங்கள் புரிந்து கொள்கிறோம். மேலும் இது பாதிக்கப்பட்டவர்களின் முழு ஒப்புதலுக்கு உட்பட்டது என்றும் அவர் ஓர் அறிக்கையில் தெரிவித்தார்.
பாதிக்கப்பட்டவர்கள் அடுத்த வாரம் முதல், அந்த வீடுகளில் குடியேற வாய்ப்புள்ளது என்று அவர் கூறினார். இந்த தற்காலிக வீடுகள் சிலாங்கூர் வீட்டுவசதி, சொத்து வாரியத்தால் வழங்கப்படும், மேலும் Airbnb இன் ஒத்துழைப்பும் இதில் இருக்கும் என்று அவர் கூறினார். பாதிக்கப்பட்டவர்களில் சிலர் கோத்தா வாரிசான், சிப்பாங்கில் தங்க வைக்கப்படுவார்கள், அதே நேரத்தில் எஞ்சியவர்கள் பின்னர் அடையாளம் காணப்படும் பல பகுதிகளில் உள்ள வீடுகளில் தங்க வைக்கப்படுவார்கள் என்று அவர் கூறினார். 1,000 சதுர அடி பரப்பளவுள்ள அந்த வீடுகளில் மூன்று படுக்கையறைகள், இரண்டு குளியலறைகள், இரண்டு வாகன நிறுத்துமிடங்கள் உள்ளன என்று அய்மான் அதிரா கூறினார்.