இம்பால், ஏப்ரல்.06-
மணிப்பூர் கலவரத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்க ரூ.217 கோடி நிதியை இந்திய மத்திய அரசு ஒதுக்கியது.
மணிப்பூரில் கடந்த 2023 மே முதல் குக்கி-மெய்தி சமூக மக்களுக்கு இடையே ஏற்பட்ட மோதல்களால் 150க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். 50,000 க்கும் மேற்பட்டோர் வீடுகளை விட்டு வெளியேறினர்.
பாதிக்கப்பட்டோருக்கு இரண்டு மாதங்களுக்கான உணவு, தங்குமிடம், மருத்துவ உதவி மற்றும் அடிப்படை வசதிகளை உறுதி செய்ய ரூ.217 கோடி நிதி பயன்படுத்தப்படும் என்று உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
23 மாதங்களுக்கு முன்பு இன வன்முறை தொடங்கிய உடனேயே 50,000 க்கும் மேற்பட்டோர் 250 நிவாரண முகாம்களில் தங்கியுள்ளனர். இவர்களுக்காக வீடுகள் கட்டப்பட்டு உள்ளன. கடந்த மார்ச் மாதத்தில், மத்திய நிதியுதவி திட்டங்கள், மாநிலங்களுக்கான சிறப்பு உதவித் திட்டம் மற்றும் பிற மத்திய திட்டங்கள் மூலம் ரூ.1,926 கோடி மத்திய அரசிடமிருந்து பெறப்பட்டது. கடந்த நிதியாண்டில், மணிப்பூருக்கு மொத்தம் ரூ.1,437 கோடி ஒதுக்கப்பட்டு இருந்தது. இது ஒரு நிதியாண்டில் இதுவரை இல்லாத அளவுக்கு அதிகபட்சமாகும்.
2024-25 நிதியாண்டில், கிராமப்புற வீட்டுவசதிக்கான நிதியாக ரூ.169 கோடி பெறப்பட்டது. பள்ளிக் கல்விக்கு சுமார் ரூ.520 கோடியும், சுகாதாரத்திற்கு ரூ.305 கோடியும், பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகத்திடமிருந்து ரூ.458 கோடியும் பெறப்பட்டன. இந்த நிதி உதவி இடம் பெயர்ந்தோரின் தேவைகளை ஓரளவு தீர்க்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.