சுபாங் ஜெயா, ஏப்ரல்.07-
கடும் பொருள் சேதத்திற்கு வித்திட்ட புத்ரா ஹைட்ஸ் எரிவாயு குழாய் வெடி விபத்துச் சம்பவம் கவனக் குறைவால் நிகழ்ந்த குற்றவியல் சம்பவமாகப் பதிவுச் செய்யப்படலாம் என்று போலீஸ் படைத் தலைவர் டான்ஶ்ரீ ரஸாருடின் ஹுசேன் இன்று கோடி காட்டியுள்ளார்.
குற்றவியல் அலட்சியத்திற்கான சாத்தியக் கூறுகள் குறித்து தற்போது போலீசார் விசாரணை செய்து வருவதாக ஐஜிபி குறிப்பிட்டார்.
எரிவாயு குழாய் வெடிப்பு தொடர்பான விசாரணையின் ஒரு பகுதியாக குற்றவியல் அலட்சியம் தொடர்பில் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
அதிக நீர் அழுத்தம் அல்லது பிற காரணங்களும் இதில் அடங்கியிருக்கும் என்று அவர் தெரிவித்தார். எஞ்சிய விவரங்கள் சிலாங்கூர் மாநில போலீஸ் தலைவர் டத்தோ ஹுசேன் ஒமார் கான் அல்லது மாவட்ட காவல் துறையினால் வழங்கப்படும் என்பதையும் அவர் விளக்கினார்.
இந்த பேரிடரினால் எத்தனை பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் மற்றும் எவ்வளவு இழப்புகள் ஏற்பட்டுள்ளன என்பதும், கருத்தில் கொள்ளப்படும் என்று சம்பவ இடத்தில் இன்று நடைபெற்ற செய்தியாளர்கள் கூட்டத்தில் டான்ஶ்ரீ ரஸாருடின் இதனைக் குறிப்பிட்டார்.