கோலாலம்பூர், ஏப்ரல்.09-
அம்பாங்கில் உள்ள ஒரு தனியார் சமயக் கல்வி மையத்தில் 14 வயது மாணவியைப் பாலியல் பலாத்காரம் புரிந்ததாக அந்த மையத்தின் பணியாளர் ஒருவரின் 18 வயது மகன் கைது செய்யப்பட்டுள்ளார்.
கடந்த ஆண்டில் அந்த தனியார் பள்ளியின் கழிப்பறையில் நடந்ததாகக் கூறப்படும் இது குறித்து பாதிக்கப்பட்ட மாணவியின் தாயாரிடம், அவரின் தோழி கூறியதைத் தொடர்ந்து இந்த சம்பவம் அம்பலமாகியுள்ளது.
பின்னர் மாணவியின் தந்தை இது குறித்து போலீசில் புகார் செய்ததைத் தொடர்ந்து அந்த 18 வயது இளைஞர் கைது செய்யப்பட்டதாக புக்கிட் அமான் போலீஸ் தலைமையகத்தின் மகளிர், சிறார் பாலியல் தடுப்புப் பிரிவின் உதவி தலைமை இயக்குநர் சித்தி கம்சியா ஹாசான் தெரிவித்தார்.
சம்பவம் நிகழ்வதற்கு முன்னதாக மாணவியிடம் அந்த இளைஞர் ஆபாசச் சேட்டையில் ஈடுபட்டதாக புகார் அளிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.