கோலாலம்பூர், ஏப்ரல்.09-
புத்ரா ஹைட்ஸ் எரிவாயு குழாய் வெடிவிபத்தில் பாதிக்கப்பட்டவர்களின் வீடுகளைச் சீரமைப்பது மற்றும் மீண்டும் கட்டிக் கொடுப்பது தொடர்பாக பிரதானத் திட்டம் ஒன்றை வீடமைப்பு, ஊராட்சித்துறை அமைச்சு, பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிடம் இன்று சமர்ப்பித்துள்ளதாக அதன் அமைச்சர் ங்கா கோர் மிங் தெரிவித்துள்ளார்.

இந்த உத்தேசப் பரிந்துரைத் திட்டம், கடந்த வாரம் அமைக்கப்பட்ட சிறப்பு பணிக்குழு மூலம் தயார் செய்யப்பட்டதாகும் என்று ங்கா கோர் மிங் விளக்கினார்.

வீடமைப்பு, ஊராட்சித்துறை அமைச்சின் கீழ் உள்ள அனைத்து ஏஜென்சிகளும் அந்த சிறப்புப் பணிக்குழுவில் இடம் பெற்றுள்ளன. குறிப்பாக, SPNB எனப்படும் Syarikat Perumahan Nasional Berhad மற்றும் PR1MA எனப்படும் Perbadanan PR1MA Malaysia (PR1MA)ஆகியவை சம்பந்தப்பட்டுள்ளதாக அமைச்சர் ங்கா கோர் மிங் சுட்டிக் காட்டினார்.

இன்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டம், கடந்த ஏப்ரல் முதல் தேதி நிகழ்ந்த புத்ரா ஹைட்ஸ் கோரத் தீ சம்பவத்தின் கடுமையை உணர்ந்து, அதீத கவனம் செலுத்தியதாகவும் ங்கா கோர் மிங் குறிப்பிட்டார்.

எரிவாயு குழாய் வெடி விபத்து நடந்த பகுதிக்கு இன்று நேரடியாக வருகை புரிந்து, நிலவரத்தைப் பார்வையிட்டப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசுகையில் ங்கா கோர் மிங் இதனைத் தெரிவித்தார்.

இந்த தீ விபத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மடானி அரசாங்கத்தின் வாயிலாகவும், சிலாங்கூர் மாநில அரசு வாயிலாகவும் பல்வேறு உதவிகள் நல்கப்பட்டு இருப்பதை அமைச்சர் சுட்டிக் காட்டினார்.