சுபாங் ஜெயா, ஏப்ரல்.11-
புத்ரா ஹைட்ஸ் எரிவாயு குழாய் வெடி விபத்தில் ஆட்கள் குடியிருக்காமல், காலியாகக் கிடந்த வீடுகள், கிடங்குகள் மற்றும் பட்டறைகள் போன்றவற்றில் ஆட்கள் வசித்ததைப் போல் சித்தரிக்கப்பட்டு, உதவித் தொகைப் பெறுவதற்கு விண்ணப்பங்கள் சமர்ப்பிக்கப்பட்டு இருப்பது கண்டு பிடிக்கப்பட்டுள்ளதாக சிலாங்கூர் மந்திரி பெசார் டத்தோ ஶ்ரீ அமிருடின் ஷாரி தெரிவித்துள்ளார்.
இந்த வெடிவிபத்தைத் தங்களுக்குச் சாதகமாக பயன்படுத்திக் கொண்ட சில தரப்பினர், சிலாங்கூர் அரசிடமிருந்து ரொக்க உதவியை எதிர்பார்த்து இத்தகைய பொய்யான விண்ணப்பங்களைச் சமர்ப்பித்துள்ளனர் என்று குறிப்பிட்டார்.
உண்மையிலேயே உதவித் தொகை பெறுவதற்கு 396 வீடுகளின் உரிமையாளர்கள் மட்டுமே தகுதி பெற்றுள்ளனர். ஆனால், இந்த எண்ணிக்கை திடீரென்று 613 ஆக அதிகரித்து இருப்பது, சந்தேகத்திற்கு இடமாக மாறியுள்ளது என்று மந்திரி பெசார் தெரிவித்தார்.