நடப்பிலுள்ள சட்டங்களை மேம்படுத்தும் அணுகுமுறைகளை விரிவாக ஆராயத் தயார்

தாப்பா, ஏப்ரல்.13-

நாட்டின் தலைமை நீதிபதியின் நியமன நடைமுறை உட்பட, தற்போதுள்ள சட்டங்களை மேம்படுத்தக்கூடிய எந்தவோர் அணுகுமுறையையும் விரிவாக ஆராய அரசாங்கம் தயாராக உள்ளது. இது தொடர்பாக பல்வேறு தரப்பினரின் கருத்துகளையும், நியமன நடைமுறையில் பிரதமரின் பங்களிப்பையும் அரசாங்கம் அறிந்திருக்கிறது என்று தகவல் தொடர்பு அமைச்சர் டத்தோ பாஃமி பாஃட்சீல் தெரிவித்தார். நீதித்துறை நியமன ஆணையச் சட்டத்தையே எதிர்த்து நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளதை அமைச்சரவை கவனத்தில் கொண்டுள்ளது. எனவே, சட்டத்தை மேம்படுத்துவதற்கான சிறந்த வழிகள் என்னவென்று அமைச்சரவை ஆராய்ந்து விரிவாகப் பார்க்கும் என்றும் அவர் கூறினார்.

ஒற்றுமை அரசாங்கத்தின் செய்தி தொடர்பாளரான பாஃமி பாஃட்சீல், மடானி அரசாங்கத்தின் கீழ் சட்ட திருத்தத்திற்காகவும் புதிய சட்டங்களை இயற்றுவதற்காகவும் இதுவரை 80 சட்டங்கள் நாடாளுமன்றத்தில் கொண்டு வரப்பட்டுள்ளன என்றார். நாட்டின் நிர்வாகத்தையும் மக்களாட்சி அமைப்பையும் வலுப்படுத்துவதில் அரசாங்கம் உறுதியாக உள்ளது என்பதற்கு இதுவே சான்று. தலைமை நீதிபதி துன் தெங்கு மைமூன் துவான் மாட் சமீபத்தில் மல்தாவில் நடைபெற்ற 24வது காமன்வெல்த் சட்ட மாநாட்டில் ஆற்றிய உரையின் பின்னணியில் அவர் இவ்வாறு கருத்து தெரிவித்தார். அந்த உரையில், நீதிபதிகள் நியமனத்தில் பேரரசருக்கு பிரதமர் ஆலோசனை வழங்கும் பங்கை நீக்குவதற்காக நீதித்துறை நியமன ஆணையச் சட்டம் 2009-ல் திருத்தம் செய்வது குறித்து பேசப்பட்டது.

முன்னதாக, தெங்கு மைமூனின் கருத்துக்கு முன்னாள் பிரதமர் அலுவலக அமைச்சர் டத்தோ ஶ்ரீ முகமட் நஸ்ரி அஸிஸ் கண்டனம் தெரிவித்திருந்தார். இது மலேசியாவின் நற்பெயருக்கு களங்கம் விளைவிப்பதுடன், பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமின் நற்பெயரையும் பாதிக்கும் என்று அவர் கூறினார். எனவே, தெங்கு மைமூன் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க அரசாங்கத்தை அவர் வலியுறுத்தினார்.

WATCH OUR LATEST NEWS