சிரம்பான், ஏப்ரல்.16
வீட்டிற்கு வெளியே உலர வைக்கப்படும் உள்ளாடைகள் அடிக்கடி களவாடப்படுவதாக சிரம்பான், கம்போங் பாரு ராசாவைச் சேர்ந்த மாது ஒருவர் போலீசார் புகார் செய்துள்ளார்.
ஆகக் கடைசியாக கடந்த செவ்வாய்க்கிழமை நிகழ்ந்த சம்பவத்தில், ஆடவர் ஒருவர் வீட்டிற்கு அருகில் தனது லோரியை நிறுத்திவிட்டு, வேலி வாயிலாக ஏறி வாசலில் குதித்து, கொடியில் உலர வைக்கப்பட்டு இருந்த உள்ளாடைகளைக் களவாடிச் சென்றது, சிசிடிவி கேமராவில் பதிவாகியிருப்பதாக 27 வயது மாது தெரிவித்தார்.
ஏற்கனவே மறைந்த தனது பாட்டியின் உள்ளாடைகள் அடிக்கடி களவாடப்படுவதாக, அவர் உயிருடன் இருந்த போது தெரிவித்த புகார்களைத் தாம் பொருட்படுத்தாத நிலையில், தற்போது அவர் கூறியது உண்மைதான் என்பதை உணர முடிந்ததாக அந்த மாது குறிப்பிட்டார்.
இதனிடைய இவ்விவகாரம் தொடர்பாக சம்பந்தப்பட்ட மாது, போலீஸ் புகார் அளித்து இருப்பதை சிரம்பான் மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி முகமட் ஹாத்தா சே டின் உறுதிபடுத்தியுள்ளார்.
ரகசிய கேமராவில் பதிவான நபரின் தோற்றத்தை அடிப்படையாகக் கொண்டு சம்பந்தப்பட்ட நபரைத் தாங்கள் தேடி வருவதாக ஏசிபி முகமட் ஹாத்தா குறிப்பிட்டார்.