தமக்காக பிரார்த்தனை செய்யுமாறு சையிட் சாடிக் சையிட் அப்துல் ரஹ்மான் கோரிக்கை

ஷா ஆலாம், ஏப்ரல்.16-

நம்பிக்கை மோசடி குற்றத்திற்காகத் தமக்கு விதிக்கப்பட்ட சிறை, அபராதம் மற்றும் பிரம்படித் தண்டனையை ரத்து செய்யக் கோரி, புத்ராஜெயா அப்பீல் நீதிமன்றத்தில் மூவார் எம்.பி. சையிட் சாடிக் சையிட் அப்துல் ரஹ்மான் செய்து கொண்ட மேல்முறையீட்டில் நாளை தீர்ப்பு அளிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


இந்த மேல்முறையீட்டு வழக்கு விசாரணையை கடந்த மார்ச் 20 ஆம் தேதி ஒத்திவைத்த அப்பீல் நீதிமன்றம், ஏப்ரல் 17 ஆம் தேதி தொடர்வதாக அறிவித்திருந்தது.

அதன் அடிப்படையில் நாளை தீர்ப்பு கூறப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுவதால் தம்முடைய மேல்முறையீடு, நல்ல முறையில் அமைய இறைவனை பிரார்த்திக்குமாறு மூடா கட்சியின் முன்னாள் தலைவரான சையிட் சாடிக் , பொதுமக்களை கேட்டுக் கொண்டுள்ளார்.

பெர்சத்து கட்சியின் இளைஞர் பிரிவான அர்மாடாவுக்குச் சொந்தமான பணத்தை நம்பிக்கை மோசடி செய்ததாகக் கூறி குற்றஞ்சாட்டப்பட்ட சையிட் சாடிக்கிற்கு கடந்த 2023 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 9 ஆம் தேதி கோலாலம்பூர் உயர் நீதிமன்றம் குற்றவாளியே என்று தீர்ப்பு அளித்தது.

சையிட் சாடிக்கிற்கு 7 ஆண்டு சிறை, ஒரு கோடி ரிங்கிட் அபராதம் மற்றும் 2 பிரம்படித் தண்டனை ஆகியவற்றை உயர் நீதிமன்றம் விதித்தது.

WATCH OUR LATEST NEWS