கோலாலம்பூர், ஏப்ரல்.18-
சீனப் பத்திரிக்கை ஒன்று, தனது முதல் பக்கச் செய்தியில், பிரசுரிக்கப்பட்ட நாட்டின் தேசியக் கொடியான ஜாலோர் கெமிலாங் வரைப்படத்தில் பிறைச் சின்னம் விடுபட்டுப் போன தவறு, சாதாரமானது அல்ல என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்தார்.
தேசியக் கொடியில் பிறைச் சின்னம், மிக முக்கியத்துவம் வாய்ந்ததாகும். எனவே இந்த விவகாரத்திற்கு சட்ட ரீதியாகவே தீர்வு காணப்பட வேண்டும் என்று பிரதமர் குறிப்பிட்டார்.
அதே வேளையில் இந்த விவகாரத்தை மிகைப்படுத்திக் கொண்டு இருக்க வேண்டாம் என்று சம்பந்தப்பட்ட தரப்பினருக்கு பிரதமர் ஆலோசனைக்கூறினார்,
காரணம், இவ்விவகாரத்தில் சட்டம் தனது கடமையைச் செய்யும் என்பதால், இதனை சட்ட நடைமுறைக்கே விட்டுவிட வேண்டும் என்று டத்தோ அன்வார் கேட்டுக் கொண்டார்.
எந்தவொரு நாட்டிலும் தேசியக் கொடி என்பது மிக முக்கிய அடையாளமாகும். எனவே இது குறித்து விளக்கம் அளிப்பதற்கும், மன்னிப்புக் கேட்பதற்கும், முன்னணி சீனப் பத்திரிக்கையான சின் சியூ டெய்லிக்கு இடம் அளிக்க வேண்டும் என்று பிரதமர் கேட்டுக் கொண்டார்.