கோலாலம்பூர், ஏப்ரல்.18-
ஜசெகவின் பொதுச் செயலாளராக மூன்று தவணைக் காலத்திற்குப் பிறகு பொறுப்பிலிருந்து விலகுவதாக கால நிர்ணயத்தை இன்று அறிவித்த அந்தோணி லோக், அதற்கு முன்னதாக கட்சியில் செய்ய வேண்டிய சீர்திருத்தங்களைத் திராணியுடன் முழு வீச்சில் செய்வதற்கு உறுதி பூண்டுள்ளதாகக் குறிப்பிட்டார்.
ஜசெகவில் தற்போது இரண்டாவது தவணையாக பொதுச் செயலாளர் பதவி வகிக்கும் அந்தோணி லோக், பதவி விலகுவதற்கு முன்னதாகவே கட்சிக்குக் கொண்டு வரக்கூடிய உருமாற்றுத் திட்டங்களை இப்போது முதல் வகுத்து வருவதாகக் கூறுகிறார்.
அரசியல் உலகம், நிச்சயமற்றத் தன்மைகளால் நிறைந்திருந்தாலும், கட்சியில் தாம் கொண்டுள்ள இலக்கு மற்றும் நோக்கம் ஒரு போதும் மாறாது என்று அவர் உறுதி அளித்தார்.
மூன்று தவணைக்குப் பிறகு, கட்சியின் வேறு எந்தப் பதவியையும் தொடராமல் ஓய்வு பெறுவதே தனது நோக்கமாக உள்ளது என்று போக்குவரத்து அமைச்சரான அந்தோணி லோக் இன்று மனம் திறந்தார்.