கோலாலம்பூர், ஏப்ரல்.19-
நரம்பியல் மற்றும் தசை பலவீன நோய்க்கு ஆளாகி, நிற்கக் கூட முடியாமல் அவதியுற்று வரும் முன்னாள் தேசிய பெருநடை வீரர் ஜி. சரவணனுக்கு உதவ மலேசிய சுகாதார அமைச்சு உறுதி பூண்டுள்ளது.
1998 ஆம்ஆண்டு காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில், 50 கிலோ மீட்டர் தூர பெருநடைப் போட்டியில் , மலேசியாவிற்குத் தங்கத்தை வென்று, சாதனைப் படைத்த 55 வயது சரவணன், கடந்த 2021 ஆண்டிலிருந்து ஒரு வகை விநோத நோயினால் பெரும் அவதிக்குள்ளாகி வருகிறார்.
சரவணனின் ஆயுட்காலம் ஐந்து ஆண்டுகளுக்கு மேல் நீடிக்க வாய்ப்பில்லை என்று அவருக்குச் சொல்லப்பட்டு உள்ள நிலையில் நாட்டிற்கு பெருமை தேடித் தந்த அந்த முன்னாள் தேசிய வீரருக்குத் தேவையான உதவிகள் செய்வதற்கு சுகாதார அமைச்சு தயாராக இருப்பதாக அதன் அமைச்சர் டத்தோ ஶ்ரீ டாக்டர் சுல்கிப்ளி அஹ்மாட் தெரிவித்தார்.
தெளிவற்றப் பேச்சு, உணவை உட்கொள்வதில் சிரமம், இரவு நேரத்தில் தூங்கும் போது கால்களில் அடிக்கடி ஏற்படும் பிடிப்புகள் முதலியவற்றினால் அவதியுற்று வந்த சரவணனுக்கு ஏற்பட்டுள்ள விநோத நோய்க்கு நிவாரணம் இல்லை என்று தெரிவிக்கப்பட்ட போதிலும், சரவணனுக்கு உதவுவது என்பது சுகாதார அமைச்சின் பொறுப்பாகும் என்று டாக்டர் சுல்கிப்ளி அஹ்மாட் குறிப்பிட்டார்.
சரவணனின் உடல் நிலை மற்றும் அவரின் நல்வாழ்வுக்குரிய உதவிகளையும், முழு ஆதரவையும் வழங்க சுகாதார அமைச்சு தயாராக இருப்பதாக டாக்டர் சுல்கிப்ளி அஹ்மாட் உறுதி அளித்தார்.