ஷா ஆலாம், ஏப்ரல்.20-
போலியான ஹஜ் பயண ஏற்பாடுகளை வழங்கி மற்றவர்களை ஏமாற்றி லாபம் சம்பாதிப்பவர்களை இஸ்லாமியர்கள் ஒரு போதும் ஆதரிக்கக் கூடாது என்று சிலாங்கூர் ஆட்சியாளர் சுல்தான் ஷாராபுஃடின் இட்ரிஸ் ஷா அறிவுறுத்தினார். அங்கீகாரம் இல்லாத முகவர்களால் யாத்ரீகர்கள் ஏமாற்றப்படுவதை அரசாங்கம் தீவிரமாகக் கருத்தில் கொள்ள வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார். ஏமாற்றுபவர்களுக்கு இறைவன் கடுமையான தண்டனை வழங்குவார் என்றும் அவர் எச்சரித்தார்.
மேலும், இந்த ஆண்டு ஹஜ் செல்லும் யாத்ரீகர்கள் புனித பூமியில் ஒழுக்கத்தைக் கடைப்பிடிக்க வேண்டும் என்றும், சிலாங்கூர் மட்டும் இன்றி மலேசியாவின் நற்பெயரைக் காக்க வேண்டும் என்றும் சுல்தான் கேட்டுக் கொண்டார். சவுதி அரேபிய அரசாங்கத்தின் விதிமுறைகளுக்குக் கீழ்ப்படியுமாறும், ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடுவதைத் தவிர்க்குமாறும் அவர் அறிவுறுத்தினார். உடல் ஆரோக்கியத்தைப் பேணுவது ஹஜ் கடமையைச் சரிவர நிறைவேற்ற உதவும் என்றும் அவர் குறிப்பிட்டார்.