அலோர் ஸ்டார், ஏப்ரல்.20-
கெடா, உலு மூடா வனப் பகுதியின் நீர்நிலைகளைப் பாதுகாப்பதால், வீட்டு பயன்பாடு, தொழிற்சாலைகள், நெல் விவசாயம் ஆகியவற்றுக்கு நீர் ஆதாரத்தை உறுதி செய்யும் என்று கெடா ஆட்சியாளர் சுல்தான் சாலேஹூடின் சுல்தான் பட்லிஷா தெரிவித்தார். வனப் பகுதியை முழுமையாகப் பாதுகாப்பதையும், அனைத்து தரப்பினரின் கூட்டு பாதுகாப்பு முயற்சிகள் மூலம் அதனை மீட்டெடுப்பதையும் மாநில அரசு உறுதிப்படுத்த வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார். இந்த நீர்நிலைகள் பல்லுயிர் பெருக்கத்தையும் பாதுகாக்கும் என்றார்.
மேலும், நெல் உற்பத்தியும் இந்த நீர் ஆதாரத்தையே சார்ந்துள்ளது. கெடா மாநில அரசின் இரண்டு மில்லியன் மரங்கள் நடும் திட்டத்தை சுல்தான் வரவேற்றார். நெல் உற்பத்தியை அதிகரிக்க நவீன தொழில்நுட்பமும் சிறந்த விதைகளைப் பயன்படுத்துவதும் அவசியம் என்றும், இதற்காக மாடா, மார்டி போன்ற அமைப்புகள் தொடர்ச்சியான ஆய்வுகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார். நாட்டின் உணவுப் பாதுகாப்பை உறுதிச் செய்ய, நெல் வயல்களில் இரண்டு வருடங்களில் ஐந்து முறை பயிரிடும் முயற்சியையும் அவர் ஆதரித்தார்.