பாதுகாவலர் துப்பாக்கிச் சூடு நடத்தியது தொடர்பில் காவல் துறை விசாரணை

ஷா ஆலாம், ஏப்ரல்.20-

கோலாலங்காட்டில் உள்ள ஓர் உணவகத்தில் நேற்று, வெட்டுக் கத்தியுடன் வந்த ஒருவரை நோக்கி பாதுகாவலர் துப்பாக்கிச் சூடு நடத்தியது தொடர்பாக காவல் துறையினர் விசாரணையைத் தொடங்கியுள்ளனர். இந்தச் சம்பவம் தொடர்பில் குற்றவியல் சட்டத்தின் 307-வது பிரிவின்படியும் ஆயுதச் சட்டம் 1960-ன் படியும் விசாரணை நடத்தப்பட்டு வருவதாக கோலாலங்காட் மாவட்டக் காவல் துறைத் தலைவர் சுப்ரிண்டெண்டன் முகமட் அக்மால்ரிஸால் ரட்ஸி தெரிவித்தார்.

சம்பவத்தன்று நண்பகல் 12.05 மணியளவில், ஆடவர் ஒருவர் மனநலம் சரியில்லாத தனது தம்பி, வீட்டில் தகராறு செய்ததாக காவல் துறையில் புகார் அளித்தார். பின்னர், அந்த நபர் பந்திங் மருத்துவமனைக்கு அருகில் இருக்கும் ஓர் உணவகத்தில் மருத்துவ அதிகாரிகளை வெட்டுக் கத்தியைக் கொண்டு மிரட்டியதாகவும், அப்போது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாகவும் தகவல் கிடைத்தது. இந்தச் சம்பவம் குறித்து பொதுமக்கள் யூகங்களை பரப்ப வேண்டாம் என்றும், தகவல் தெரிந்தவர்கள் காவல் நிலையத்தைத் தொடர்பு கொள்ளவும் அக்மால்ரிஸால் ரட்ஸி கேட்டுக் கொண்டுள்ளார். சமூக ஊடகங்களில் இந்தச் சம்பவம் தொடர்பான காணொளி ஒன்று அதிவேகமாகப் பகிரப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

WATCH OUR LATEST NEWS