பாரிசான் நேஷனல், பெரிகாத்தான் நேஷனல் வேட்பாளர்கள் சொத்து மதிப்பை அறிவிக்க வேண்டும்

தாப்பா, ஏப்ரல்.20-

ஆயர் கூனிங் சட்டமன்ற இடைத் தேர்தலில் போட்டியிடும் பிஎஸ்எம் கட்சியின் வேட்பாளர் பவானி கே.எஸ்., பாரிசான் நேஷனல், பெரிகாத்தான் நேஷனல் ஆகிய இரு கட்சிகளின் வேட்பாளர்களும் தங்கள் சொத்து மதிப்பை அறிவிக்க வேண்டும் என்று சவால் விடுத்துள்ளார். தான் சட்டமன்ற உறுப்பினராக வருவதற்கு முன்பு ஒரு காரை மட்டுமே வைத்திருந்ததாகவும், ஆனால் திடீரென சொகுசு கார் வைத்திருப்பவர்கள் ஊழல் செய்ய வாய்ப்புள்ளது என்றும் அவர் கூறினார்.

பிஎஸ்எம் கட்சி ஒவ்வோர் ஆண்டும் சொத்துக்களை அறிவிப்பது போல, பாரிசான் நேஷனலின் யூஸ்ரி பாக்கிரும் பெரிக்காத்தான் நேஷனலின் அப்துல் முஹைமின் மாலிக்கும் தங்கள் சொத்து மதிப்பை அறிவிக்க வேண்டும் என்று பவானி வலியுறுத்தினார். இதன் மூலம் சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகு அவர்களின் சொத்துக்கள் அதிகரித்துள்ளதா இல்லையா என்பதை மக்கள் அறிந்து கொள்ள முடியும் என்றும் அவர் தெரிவித்தார். தனது தற்போதைய சொத்து மதிப்பு சுமார் 21 ஆயிரத்து 248 ரிங்கிட் என்றும், இதில் கார், கைபேசி, ரொக்கம், வங்கி சேமிப்பு ஆகியவை அடங்கும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். ஆயர் கூனிங் சட்டமன்ற இடைத் தேர்தல் எதிர்வரும் ஏப்ரல் 26-ம் தேதி நடைபெற உள்ளது.

WATCH OUR LATEST NEWS